கிரிஸ்ஃபிளையர் புள்ளிகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய ஆடவர்

2 mins read
67ab5e3a-89f1-401c-afbe-423679420d1f
கிரிஸ்ஃபிலாயர் புள்ளிகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கிய இந்தோனீசிய ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. - படம்: சாவ்பாவ்

கிரிஸ்ஃபிளையர் (KrisFlyer) கணக்குகளைச் சட்டவிரோதமாக வாங்கி அதன் மூலம் திரட்டப்பட்ட புள்ளிகளைக் கொண்டு பொருள்கள் வாங்கிய ஆடவர்மீது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (மே 29) குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த 28 வயது ரிஸால்டி பிரிமந்தா புத்ராமீது கணினியைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கணினிப் பொருள்களை அனுமதியின்றி பெற்றதற்காக இரு குற்றச்சாட்டுகளையும் அத்தகைய பொருள்களை அனுமதியின்றி மாற்றியதற்காக இரு குற்றச்சாட்டுகளையும் புத்ரா எதிர்நோக்குகிறார்.

கிரிஸ்ஃபிளையர் கணக்குகளுக்குள் அனுமதியின்றி புகுந்ததாகக் கூறப்படும் புத்ரா ஜூன் 2024ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்து அந்தக் கணக்குகளில் உள்ள புள்ளிகளைப் பயன்படுத்தி சாங்கி விமான நிலையக் கடையில் சாம்சங் கைப்பேசியையும் அதற்கான உறையையும் வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதோடு பூகிஸில் உள்ள கடையிலிருந்தும் புத்ரா சில உணவுப் பொருள்களை வாங்க்கியதாக நம்பப்படுகிறது.

புத்ரா $1,600க்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாகக் காவல்துறை அறிக்கை குறிப்பிட்டது.

அதையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 2024 அக்டோபர் 11ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து புத்ராவின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும், புத்ரா அதே ஆண்டு செப்டம்பரில் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

இவ்வாண்டு ஜனவரி 11ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த புத்ராவை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

புத்ரா தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாட விருப்பம் தெரிவித்தார். அவர் தமது வழக்கறிஞரைத் தொடர்புகொள்ளவும் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார்.

புத்ரா ஜூன் 5ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்குத் திரும்புவார்.

குறிப்புச் சொற்கள்