$1 மில்லியன் பிணையில் வெளிவந்தவர்மீது மேலும் குற்றம் சாட்டப்படலாம்

‘என்விடியா’ சில்லு வழக்கு

$1 மில்லியன் பிணையில் வெளிவந்தவர்மீது மேலும் குற்றம் சாட்டப்படலாம்

படம்: ராய்ட்டர்ஸ்

02 May 2025 - 12:08 pm

1 mins read

‘என்விடியா’ நிறுவனச் சில்லுகளைக் கொண்ட கணினிச் சேவையகங்களை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தொடர்புடைய ஆடவர் மூவரில் ஒருவர்மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்த வழக்கில், சீன நாட்டவரான லி மிங், 51, $1 மில்லியன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரர்களான 48 வயது ஆலன் வெய் சாவ்லுன், 40 வயது ஏரோன் வூன் குவோ ஜி இருவரும் முறையே $800,000, $600,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

விசாரணை தொடர்வதால் இந்த வழக்கை 12 வாரங்கள் ஒத்திவைக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை (மே 2) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், லியின் வழக்கறிஞர் விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் வரை வழக்கை ஒத்திவைக்கும்படி கோரினார்.

வழக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும் என்ற நீதிபதியின் கேள்விக்குப் பதிலளித்த அரசாங்க வழக்கறிஞர், இந்த வழக்கு சிக்கலானது என்றும் லிமீது கூடுதலான குற்றச்சாட்டுகள் சுமத்த வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினார்.

வழக்கில் சிங்கப்பூரர்கள் இருவரையும் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

அதையடுத்து, வழக்கை 8 வாரங்கள் ஒத்திவைக்க நீதிபதி அனுமதியளித்தார். வழக்கு மீண்டும் ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

லிமீது ஏற்கெனவே இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதர சிங்கப்பூரர்கள் இருவரும் தலா ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
வழக்கறிஞர்விசாரணைஎன்விடியா