மின்சிகரெட் கடத்தல் கும்பல் ஒன்றின் முக்கிய நபராகக் கருதப்படுவருக்கு வேலை செய்த ஆடவருக்கு 40 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவா வேங் ஜூ என்னும் 32 வயது சிங்கப்பூரர் 6.5 மில்லியன் வெள்ளி மதிப்புடைய 500,000க்கும் அதிகமான மின்சிகரெட் மற்றும் அது சார்ந்த பொருள்களைக் கிடங்கு ஒன்றில் வைத்து நிர்வாகம் செய்துவந்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஆடவர் ஒப்புக்கொண்டார்.
ஜூ, 34 வயது மலேசியரான சுவா வீ மிங்கிற்கு வேலை செய்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீ மீதான வழக்கு விசாரணையில் உள்ளது.
மின்சிகரெட்டுகளும் அது சார்ந்த பொருள்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கு குறித்த தகவலை நீதிமன்றம் வெளியிடவில்லை.
தற்போது ஜூ, 30,000 வெள்ளி பிணையில் உள்ளார். அவர் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூ 2023ஆம் ஆண்டு மின்சிகரெட் கடத்தல் கும்பலுக்கு வேலை செய்யத் தொடங்கினார். மின்சிகரெட் பொருள்களை அவர் பொட்டலமிடுவதற்காக மாதம் 2,500 வெள்ளியை ஊதியமாகப் பெற்றார்.
ஜூவுடன் இணைந்து சூ மிங் ஹிங் என்னும் 31 வயது ஆடவரும் கிடங்கில் வேலை செய்துள்ளார். தலைமறைவான ஹிங்கை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜூ மின்சிகரெட் பொருள்களை டெலிகிராம் வழி விநியோகமும் செய்துள்ளார். ஜூவுக்குப் பொருள்களை விநியோகம் செய்ய உதவிய இரண்டு ஓட்டுநர்களும் விசாரணையில் உள்ளனர். அவர்கள் தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி சுகாதார அறிவியல் ஆணையத்தின் அதிகாரிகள் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் ஜூ சிக்கினார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மிங்கும் சிக்கினார். அவர் அக்டோபர் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

