காகப் பொறியைச் சீர்குலைத்த ஆடவர் மீது குற்றம் சுமத்தப்படும்

1 mins read
64e24529-c30f-43e3-92cb-76d767857e22
மே 25, 2023 அன்று லோரோங் 7 தோ பாயோவில் அமைக்கப்பட்ட காகப் பொறியில் இரண்டு காகங்கள் காணப்பட்டன. - கோப்புப் படம்: சேனல் நியூஸ் ஏஷியா

தோ பாயோவில் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேசிய பூங்காக் கழகத்தால் அமைக்கப்பட்ட காகப் பொறியைச் சீர்குலைத்ததற்காக 77 வயது ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

லோராங் 4, தோ பாயோவின் புளோக் 181க்கு அருகிலுள்ள புல்வெளியில் தேசிய பூங்காக் கழகம் வைத்திருந்த காகப் பொறியின் வலையைப் பாதுகாக்கும் கம்பிவட இணைப்புகளை அந்த நபர் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாகப் பொறியில் சிக்கிய காகங்கள் தப்பிச் சென்றதாக திங்கட்கிழமை (டிசம்பர் 15) அன்று காவல்துறை ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அக்டோபர் 20ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இரண்டு நாள்களுக்குப் பிறகு புலனாய்வு, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் அந்த ஆடவரை அடையாளம் கண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொது அமைப்பின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

“இதுபோன்ற குறும்புச் செயல்களைக் காவல்துறை தீவிரமாகக் கருதுகிறது. மேலும் பொதுச் சொத்துகளையோ, பொது நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு கருவியையோ சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்,” என்று காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்