உட்புற வடிவமைப்பாளராகத் தன்னிச்சையாகத் தொழில் புரியும் ரெக்ஸ் ஸாங் ஜியாஹாவ், 38, புதுப்பிப்பு நிறுவனம் ஒன்றின் மேலாளரிடமிருந்து $207,000க்கும் அதிகமான கையூட்டைப் பெறுவதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தில் சொத்து மேம்பாட்டுப் பிரிவின் உதவி மேலாளரான லயனல் லோ ஜுன் ஜியேவுடன் இணைந்து செயல்பட்டார்.
தற்போது லோ, 36, ‘எஸ்ஐஏ’இல் பணிபுரியவில்லை. அவ்விருவரும் போர்க்காலப் படை வீரர்களுக்கான பணிகளின் மூலம் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்ததாக அரசாங்கத் தரப்பு கூறியது.
இருவரும் அப்போது லின் ஐடி குழுமத்தில் இருந்த 52 வயது ஜோசஃப் ஆங் கொக் லெங்கிடமிருந்து 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம்வரை ஆறு முறை பணம் பெற்றதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆர் அர்விந்தரன் கூறினார்.
ஸாங் திங்கட்கிழமையன்று ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை ஒப்புக்கொண்டார். ஆங், லோ ஆகியோருக்கான வழக்குகள் தொடர்கின்றன.
குற்றம் நடந்த நேரத்தில் லோ எஸ்ஐஏ நிறுவனத்துக்கு அவ்வப்போது புதுப்பிப்புத் திட்டங்களை நிர்வகித்து வந்தார். குத்தகைகள் அல்லது விலைக்குறிப்புகள் மேற்கொள்வது அவரின் பணிகளில் அடங்கும்.
விண்ணப்பதாரர்களிடமிருந்து குத்தகைகளை அல்லது விலைக்குறிப்புகளைப் பெற்ற பின், அவர் குத்தகையாளர்களை நேர்காணலுக்குத் தொடர்புகொண்டு யாருக்குக் குத்தகை வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைப்பார்.
நேர்காணல்களும் முடிவெடுக்கும் பொறுப்பும் லோவிடமும் அவரது மேற்பார்வையாளரிடமும் ஒப்படைக்கப்பட்டன.
2018ஆம் ஆண்டு இறுதிக்கும் 2019ஆம் ஆண்டு தொடக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மாடிக் கட்டடத்திற்கான கட்டுமானத்திற்கு எஸ்ஐஏ குத்தகை மேற்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
2018ஆம் ஆண்டில் அத்திட்டத்திற்குக் கட்டடக் குத்தகையாளர்களைப் பரிந்துரைக்குமாறு லோ ஸாங்கிடம் கேட்டார்.
தம்மிடம் எஸ்ஐஏ நிறுவனத்தில் தெரிந்த நபர் இருப்பதாகக் குத்தகையாளரிடம் கூறும்படி லோ ஸாங்கிடம் தெரிவித்ததாய் வழக்கறிஞர் சொன்னார்.
அந்த நபர் குறிப்பிட்ட கட்டணத்திற்கு, குத்தகையைப் பெறுவதற்கு குத்தகையாளருக்கு உதவுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்கள்படி, ஸாங் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகவும், அவ்விருவரும் அந்தக் கட்டணத்தைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டதாகவும் தெரியவந்தது.
2018ஆம் ஆண்டு இறுதியில் ஸாங், திட்டத்தில் விருப்பம் தெரிவித்த ஆங்கைத் தொடர்புகொண்டார். அங் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முற்பட்டார்.
ஸாங், அங்கிற்குத் தேவையான ரகசியத் தகவல்களை வழங்கியதாகவும் வழக்கறிஞர் கூறினார்.
அந்தக் குத்தகை பின்னர் லின் ஐடி நிறுவனத்துக்குச் சுமார் $2.17 மில்லியனுக்கு வழங்கப்பட்டது.
குற்றம் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அந்த மூன்று சிங்கப்பூரர்களும் 2022ஆம் ஆண்டில் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஸாங்கிற்கு செப்டம்பரில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.