சீனப் புத்தாண்டின் முதல் நாளில் (ஜனவரி 22) சொந்த பந்தங்களைச் சந்தித்துவிட்டு இரவில் உறங்கிக்கொண்டிருந்த ஈசூன் குடியிருப்பாளர்களுக்குப் பெரும் தொந்தரவாக அமைந்தது காரிலிருந்து கிளம்பிய சத்தம்.
புளோக் 128 ஈசூன் ஸ்திரீட் 11 அருகே திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் இருந்த கார் ஒன்றிலிருந்து தொடர்ந்து ஒலி எழுப்பப்பட்டதால் அங்கு வசித்த குடியிருப்பாளர்களின் தூக்கம் கலைந்தது.
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 2 மணியளவில் ஒலி கேட்கத் தொடங்கியதாக நத்தேனியல் என்பவர் கூறினார்.
தமது வீட்டு சன்னலில் இருந்து எட்டிப் பார்த்த அவர், கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற கார் ஒன்றிலிருந்து ஒலி எழுந்ததை உணர்ந்தார்.
அந்த காரில் இருந்த ஆடவர், காரிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தபோதுதான் ஒலி நின்றதை நத்தேனியல் கவனித்தார்.
அந்த ஆடவரிடம் விசாரிக்க நத்தேனியல் வீட்டிலிருந்து கீழே இறங்கினார். கார் இருக்கையில் அந்த ஆடவர் சாய்ந்து இருந்ததையும் காருக்குப் பக்கத்தில் உள்ள புல்வெளியில் காலியான மதுப்புட்டி இருந்ததையும் நத்தேனியல் பார்த்தார்.
அந்த ஆடவர் குடிபோதையில் இருப்பதைக் கவனித்த நத்தேனியல், காவல்துறையை அழைத்தார்.
நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அந்த ஆடவரிடம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியதாக நத்தேனியல் சொன்னார். நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் வந்ததையும் அவர் கவனித்தார்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "ஜனவரி 23ஆம் தேதி அதிகாலை 2.08 மணிக்கு புளோக் 128 ஈசூன் ஸ்திரீட் 11ல் உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
"குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் 40 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல்துறை விசாரணை தொடர்கிறது," என்று குறிப்பிட்டது.

