சுகாதார அமைச்சு MaNaDr மருந்தகத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. அதுகுறித்து அமைச்சு மருத்தகத்திற்கு விளக்கக் கடிதத்தையும் அனுப்பியுள்ளது.
“அமைச்சு நடத்திய மதிப்பீட்டில் இனி MaNaDr மருத்தகத்தால் வெளிநோயாளி மருத்துவச் சேவைகளை தகுந்த முறையில் வழங்கமுடியாது” என்று சுகாதார அமைச்சு வியாழக்கிழமை (அக்டோபர் 24) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
MaNaDr மருந்தகத்தில் இணையம் வழி மருத்துவச் சேவை வழங்கிய 41 மருத்துவர்கள் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தால் விசாரிக்கப்பட உள்ளனர்.
அம்மருத்துவர்கள் நெறிமுறை வழிகாட்டுதல்களை மீறினார்களா, தொழில்முறையில் தவறாக நடந்துகொண்டார்களா என்பது குறித்து விசாரிக்கப்படுவார்கள் என்று அமைச்சு கூறியது.
இரண்டு மாதத்திற்கு முன்னர் MaNaDr மருந்தகத்தின் இணையம் வழி மருத்துவ சேவையை நிறுத்த சுகாதார அமைச்சு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சு நடத்திய விசாரணையில், MaNaDr மருந்தகத்தின் இணையம் வழி மருத்துவ சேவைகள் பெரும்பாலானவை குறுகிய நேரத்தில் முடிந்ததை கண்டுபிடித்தது.
ஒரு நிமிடத்திற்குள் நோயாளிகளிடம் பேசிவிட்டு அவர்களுக்கு மருத்துவ விடுப்புக்கான கடிதத்தை மருத்துவர்கள் பலமுறை கொடுத்துள்ளனர். மேலும் ஒரு குறுகிய காலத்தில் அதிகமான அளவிலும் மருத்துவர்கள் மருத்துவ விடுப்பு கடிதத்தை கொடுத்துள்ளனர்.
நோயாளிகளின் தகவல்களையும் அது சரியாக ஆவணப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற காரணங்களால் அம்மருந்தகத்தால் தகுந்த முறையில் சேவைகள் வழங்கமுடியாது என்று விசாரணையில் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
41 மருத்துவர்களில் 13 பேர் பொது மருத்துவத்துறையில் பணியாற்றிக் கொண்டே MaNaDr மருந்தகத்திற்கு வேலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வேலை விதிமுறைகளை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
13ல் 5 மருத்துவர்கள் பொது மருத்துவத்துறையில் இருந்து விலகிவிட்டனர். 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் விளக்கக் கடிதத்திற்கு 14 நாள்களுக்குள் MaNaDr மருந்தகம் பதில் தரலாம்.

