தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபேர்பிரைஸ் ஊழியர்களுக்கு $220,500 லஞ்சம் கொடுத்த மீன் மொத்த விற்பனையாளர்

2 mins read
2cca2b73-4dd7-42ae-8059-e5ffd169c961
‘நாம் சூன் சின் கீ அண்ட் கோ’ நிறுவனப் பங்காளி இங் கெங் மெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபேர்பிரைஸ் பேரங்காடியுடன் தனது தொழிலை விரிவுபடுத்த விரும்பிய மீன் மொத்த விற்பனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், ஃபேர்பிரைஸ் ஊழியர்களுக்குக் குறைந்தது $220,500 லஞ்சம் கொடுத்தார்.

‘நாம் சூன் சின் கீ அண்ட் கோ’ நிறுவனத்தின் பங்காளியுமான இங் கெங் மெங், 2013க்கும் 2020க்கும் இடையில் இந்தக் குற்றங்களைப் புரிந்தார்.

$90,000 சம்பந்தப்பட்ட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பளிக்கும்போது, எஞ்சிய $130,500 சம்பந்தப்பட்ட மேலும் ஆறு குற்றச்சாட்டுகளை நீதிபதி கவனத்தில் கொள்வார்.

ஒரு வேனை ஆபத்தான முறையில் ஓட்டிச்சென்று இருவரைக் காயப்படுத்திய வேறொரு குற்றச்சாட்டையும் 59 வயது இங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

லஞ்ச ஊழலுடன் தொடர்புடைய ஃபேர்பிரைஸ் ஊழியர்கள் இருவருக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.

மொத்தம் 12 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 48 வயது லிம் கியன் கொக் என்பவருக்கு இவ்வாண்டு மார்ச் மாதம் நான்கு ஆண்டு, ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் மூத்த அணித் தலைவராக வேலை செய்தார்.

இன்னொரு ஃபேர்பிரைஸ் அணித் தலைவரான 70 வயது சீ ஹாக் லாமுக்கு மூன்று ஆண்டு, இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்விருவரும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் வாங்கியிருந்தனர். அந்தப் பணத்தைச் சமமாகப் பிரித்து, ஆளுக்கு $261,500 எடுத்துக்கொண்டனர்.

லஞ்சம் கொடுத்த நிறுவனங்களிலிருந்து இருவரும் அதிக அளவில் மீனும் கடலுணவும் வாங்கினர். லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு 2020 செப்டம்பர் மாதம் விசாரிக்கத் தொடங்கும்வரை இந்த ஊழல் தொடர்ந்தது.

இங் மீதான வழக்கில் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்