வேலையில் பழக்கமான பெண்ணை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜேஸ்பர் லீ லூங் குவானுக்கு 12 பிரம்படியோடு 14½ ஆண்டுச் சிறைத்தண்டனையும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி நடந்தது. இருவருக்குமே அன்றுதான் பிறந்தநாள். அதைக் கொண்டாட விவோசிட்டி கடைத்தொகுதியில் அவர்கள் இரவு விருந்திற்காகச் சந்தித்தனர். மது போதையில் இருந்த மாதை வீட்டில் கொண்டுவிடுவதற்காக லீ காரில் அழைத்துச் சென்றார். பின்னர் அந்தப் பெண்ணை அவரின் வீட்டிலேயே சீரழித்தார் லீ.
பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுவதை 37 வயது லீ மறுத்தார். விசாரணைக்குப் பிறகு சென்ற மாதம் (பிப்ரவரி) 10ஆம் தேதி அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
மது அருந்தியிருந்ததால் பாலியல் உறவுக்கு இணங்கும் நிலையில் பெண் இல்லை என்றும் அதற்கு அவர் ஒப்புதல் தரவில்லை என்றும் அரசாங்கத் தரப்பு வாதிட்டது.
லீயின் தரப்பில் வழக்கறிஞர் கிரெகரி ஃபோங் வாதிட்டார். இருவரும் ஒப்புக்கொண்டே உறவில் ஈடுபட்டதாகவோ பெண் அதற்கு இணங்கியதாய் லீ தவறாய்ப் புரிந்துகொண்டதாகவோ அவர் சொன்னார்.
உயர்நீதிமன்ற நீதிபதி மாவிஸ் சியோன்ஹ், அவரின் வாதத்தை நிராகரித்தார். சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர் கிட்டத்தட்ட நினைவிழந்த நிலையில் இருந்தார் என்றும் பாலியல் உறவுக்கு இணங்கும் நிலையில் அவர் இல்லை என்றும் நீதிபதி கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண், நேர்மையான முறையில் வாக்குமூலம் அளித்ததாகவும் அது மற்ற ஆதாரங்களுடன் ஒத்துப்போனதாகவும் அவர் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அதற்கு மாறாக, லீ நேர்மையற்ற முறையிலும் நடந்தவற்றை இட்டுக்கட்டியும் சொன்னதாக நீதிபதி குறிப்பிட்டார். அவர் முன்வைத்த ஆதாரம் அரசாங்கத் தரப்பின் வாதத்தின்மீது சந்தேகத்தை எழுப்பத் தவறியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
லீ, $100,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். தீர்ப்புக்கு எதிராய் மேல் முறையீடு செய்யப்போவதாக அவர் கோடிகாட்டியுள்ளார்.

