இயற்கை எழில் கொஞ்சும் மண்டாய் ரெய்ன்ஃபாரஸ்ட் ஓய்வு விடுதி 2025 ஏப்ரலில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்திற்குள், ஐந்து வினவிலங்குப் பூங்காக்களின் சுற்றுச்சூழலில் அந்த விடுதி அமைந்து உள்ளது.
சிங்கப்பூர் வனவிலங்கு பூங்கா, ‘நைட் சஃபாரி’, ‘ரிவர் வொண்டர்ஸ்’, ‘பேர்ட் பாரடைஸ்’, இனி வரவிருக்கும் ‘ரெய்ன்ஃபாரஸ்ட் வைல்ட்’ ஆகியன அந்த ஐந்து பூங்காக்கள்.
ஆடம்பர ஹோட்டல்களை நிர்வகிக்கும் ‘பன்யான் ட்ரீ’ உருவாக்கி இருக்கும் இந்த ஓய்வு விடுதியில் 338 அறைகள் இருக்கும்.
கட்டடக் கலையும் இயற்கை வளமும் கலந்த ஒன்றாக அந்த விடுதியை அமைக்க ‘பன்யான் ட்ரீ’ திட்டமிட்டு உள்ளதாக மண்டாய் வனவிலங்குக் குழுமம் புதன்கிழமை (டிசம்பர் 18) கூறியது.
4.6 ஹெக்டர் தளத்தில் பல முதிர்ச்சி மரங்கள் சுற்றி இருக்க அவற்றின் நடுவில் ஓய்வு விடுதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு.
விடுதி நுழைவாயிலின் பக்கவாட்டில் மழை மரமும் இந்தியன் பீச்சு மரமும் அமைந்திருக்கும். விடுதி அறைகளின் சன்னல்கள், இயற்கை வெளிச்சத்திற்காக முழுமையாக திறந்தே இருக்கும்.
வெப்பமண்டல மழைக்காடுகளின் குளிர்ந்த வளிமண்டலச் சூழலைப் போலவே அறைகளின் சுற்றுப்புற வெப்பநிலை அமைக்கப்பட்டு இருக்கும் என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் விளக்கி உள்ளது.

