மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் உள்ள அருகிவரும் விலங்கான சிகப்பு நிற ‘லெமூர்’ குரங்கிற்குப் பெண் ஒருவர் குளிர்பானம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படம் இன்ஸ்டகிராமில் வெளியானதைத் தொடர்ந்து, வனவிலங்குக் காப்பகத்திற்கு வரும் பொதுமக்கள் விலங்குகளுக்கு உணவளிப்பதைத் தவிர்க்குமாறு மண்டாய் வனவிலங்கு குழுமம் நினைவூட்டியுள்ளது.
‘Sgfollowsall’ எனும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்றில், கறுப்பு நிற மேற்சட்டை அணிந்த பெண் ஒருவர், சிவப்பு நிற ‘லெமூர்’ இனக் குரங்கு ஒன்றைத் தமது கையால் வருடியவாறு அதற்குக் குளிர்பானம் அளிப்பதைப் போன்ற புகைப்படத்தைக் காணமுடிந்தது.
இச்சம்பவம் மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில்தான் நடந்தது என்பதை உறுதிப்படுத்திய அதன் பேச்சாளர், அது எந்நேரத்தில் எந்த நாளில் நடந்தது போன்ற விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டது.
பிட்டி (piddy) எனப் பெயரிடப்பட்டுள்ள அக்குரங்கின் பராமரிப்பாளர், குளிர்பானம் பருகியதால் அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.
இருப்பினும், பார்வையாளர்களுக்கான மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் கொள்கையை அதன் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

