தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம்: அமைச்சர் இந்திராணி ராஜா

4 mins read
9c83e857-5b26-4c58-addc-424a172633af
அமைச்சர் இந்திராணி ராஜாவிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்ட டாக்டர் உமா ராஜன். - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்

அரசாங்கம், சமூகம், பணியிடங்கள், குடும்பங்கள், தனிநபர்கள் ஆகியோர் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குப் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையைப் பொறுத்தவரை பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பெண்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என்று அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் ‘ஷி’ எனும் பெண் தொழில்முனைவர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கு அமைக்கப்பட்ட பிரிவின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் இந்திராணி ராஜா அவ்வாறு கூறினார்.

பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான அமைச்சருமான இந்திராணி ராஜா, “பெண்கள் அவர்களின் கனவுகளை நனவாக்க சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபை தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அடுத்த ஆண்டு எஸ்ஜி 60 எனும் சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டத்தை நோக்கிச் செல்லும் இவ்வேளையில், பெண்களின் புத்தாக்க சிந்தனையும் மீள்திறனும் துடிப்பான சிங்கப்பூரை உருவாக்க மிகவும் தேவைப்படும். இது முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்துடன் ஒன்றிணைந்துள்ளது,” என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் ஆலோசகருமான இந்திராணி ராஜா தொழில்முனைவர்களுக்கு ஆதரவு அளிப்பதை ஒட்டிப் பேசியபோது, “அனைவரும் அவர்களின் லட்சியங்களை அடைவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். விரிவான கொள்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்க நாடு கடப்பாடு கொண்டுள்ளது. பெண்களுக்கு நியாயமாகவும் சமமாகவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்,” என்று கூறினார்.

புதன்கிழமை (நவம்பர் 20) மாலை கல்சா அசோசியேஷன் மண்டபத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை உறுப்பினர்கள் உட்பட சமூக பங்காளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

“பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது ஓர் இயக்கம் என்பதைவிட அது ஒரு முன்னேறும் சமூகத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது. பெண்கள் தலைமை தாங்கவும், புத்தாக்கத்துடன் யோசிக்கவும் ஆதரவு அளிக்கவேண்டும். தற்போது ஷி பிரிவின்கீழ் வருங்கால தொழில்முனைவர்களை உருவாக்குவதற்கான வழிகாட்டித் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இன்றைய சூழலில் பெண்கள் சாதிக்க நிறுவனங்கள் பெரும்பங்காற்றுகின்றன. ஷி பிரிவை வைத்து சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை தொடர்ந்து பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகளில் இறங்கும்,” என்று சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை தலைவர் நீல் பரேக் கூறினார்.

“தொழில் உலகத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது எங்களின் முக்கியப் பொறுப்பு. பெண் தொழில்முனைவர்கள் இதர தொழில்முனைவர்களைச் சந்தித்து அவர்களுடன் கூட்டாகத் தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லத் திறன்களை வளர்த்துக்கொள்ள ஷி ஒரு சிறந்த தளம்,” என்றார் ஷி பிரிவின் தலைவர் ஜாய்ஸ் ஸ்டெல்லா ராணி.

நிகழ்ச்சியில் மற்றொரு முக்கிய அங்கமாக பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மூவருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் பொதுச் சேவைக்கும் கலைக்குமான வாழ்நாள் சாதனையாளர் விருதை 84 வயதாகும் டாக்டர் உமா ராஜன் பெற்றுக்கொண்டார்.

கலைக்கும் பொது சுகாதாரத்துக்கும் பெரிய அளவில் பங்காற்றியுள்ள அவர் தமது 40 ஆண்டுகால அனுபவத்தை வைத்து நாட்டின் சுகாதாரக் கொள்கைகளைச் செதுக்கியுள்ளார். அதே நேரத்தில், அனுபவம் வாய்ந்த நாட்டியமணியான டாக்டர் உமா, சிங்கப்பூரில் இந்திய கலாசார மரபைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

சுகாதார அமைச்சில் பள்ளிச் சுகாதாரச் சேவை பிரிவுக்கும் முதியோர் பராமரிப்புப் பிரிவுக்கும் இயக்குநராகச் சேவையாற்றிய டாக்டர் உமாவுக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் இஸ்தானாவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சாதனை முறியடிப்பு மற்றும் கலாசாரத் தூதர் விருதைத் திருவாட்டி விஜயா மோகன் பெற்றுக்கொண்டார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ரங்கோலிக் கலைஞரான அவர் 51 சாதனைகள் படைத்து அவற்றைச் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.

விருதைப் பெற்றுக்கொண்ட ரங்கோலி கலைஞர் விஜயா மோகன்.
விருதைப் பெற்றுக்கொண்ட ரங்கோலி கலைஞர் விஜயா மோகன். - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்

வசந்தம் தொலைக்காட்சிப் பிரபலமும் புகழ்பெற்ற பாடகியுமான சுதாசினி ராஜேந்திரனுக்கு கலை மற்றும் கலாசார விருது கிடைத்தது. வசந்தம் தொலைக்காட்சிக்கு தீபாவளிப் பண்டிகைப் பாடலை எழுதித் தயாரித்த முதல் பெண் என்ற பெருமையைக் கொண்டுள்ள சுதாசினி, பெண்கள் மட்டும் அடங்கியுள்ள இசைக் குழுவையும் வழிநடத்துகிறார்.

வசந்தம் தொலைக்காட்சி பிரபலமும் புகழ்பெற்ற பாடகியுமான சுதாசினி ராஜேந்திரனுக்கு கலை மற்றும் கலாசார விருது கிடைத்தது.
வசந்தம் தொலைக்காட்சி பிரபலமும் புகழ்பெற்ற பாடகியுமான சுதாசினி ராஜேந்திரனுக்கு கலை மற்றும் கலாசார விருது கிடைத்தது. - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்

“இந்த விருது எனக்குப் பேரளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நான் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகள் போற்றப்பட்டுள்ளன. அதோடு, பெண்கள் இன்று பல்வேறு வகைகளில் சாதனை புரிந்து வருகிறார்கள். சமூகம் பெண்களைத் தூக்கி நிறுத்தி ஆதரவு அளிக்கவேண்டும்,” என்று டாக்டர் உமா ராஜன் சொன்னார்.

“பெண்கள் புதிதாக ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால் அது முடியாது என்று நினைப்பதைவிட, முதலில் அதைத் தொடங்கிப் பார்க்க வேண்டும். எதுவும் செய்து பார்த்தால்தான் அதன் விளைவு என்ன என்று தெரியும். பெண்கள் எதற்கும் தயங்கக் கூடாது. அவர்களுக்குப் பக்கபலமாக ஷி பிரிவும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையும் உள்ளன என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,” என்று சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் பொருளாளர் மாலதி பாலகிருஷ்ணன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்