சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் ‘ஏஐ’ பாடங்கள் கட்டாயம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் ‘ஏஐ’ பாடங்கள் கட்டாயம்

2 mins read
262acfe4-3e6b-49f2-8741-9b0c065bbeca
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் புதிய செயற்கை நுண்ணறிவு உத்தியைப் அறிவித்துள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இளநிலை மாணவர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் குறைந்தது இரண்டு பாடங்களைப் பயில்வது இந்த மாதத்திலிருந்து கட்டாயமாக்கப்படுகிறது.

அவர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் செயற்கை நுண்ணறிவுப் பாடங்களைப் பயிலவேண்டும்.

பல்கலைக்கழகத்தில் சேரும் புதிய மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுக்கான அறிமுகப் பாடமும் அவற்றில் அடங்கும்.

பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள், புதிய மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் ‘சேட்ஜிபிடி எட்யூ’ என்ற தளத்தையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பல்கலைக்கழகங்களிலும் பள்ளிகளிலும் பயன்படுத்துவதற்கு ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம் அந்தத் தளத்தை உருவாக்கியது.

புதிய செயற்கை நுண்ணறிவு உத்தியைப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) அறிவித்தது. அதன்கீழ், ஒவ்வொரு பாடப்பிரிவும் கற்பிக்கப்படும் முறையிலும் மாணவர்களின் அன்றாடக் கல்வியிலும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்படும்.

அதேவேளை, முடிவெடுக்கும் திறன், தொடர்புத் திறன் போன்ற பண்புகளையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்வது உறுதிப்படுத்தப்படும்.

“பல்கலைக்கழகத்தின் அடித்தளப் பணி மனிதர்களை வளர்ப்பதுதானே தவிர செயற்கை நுண்ணறிவை வளர்ப்பதன்று,” என்றார் பல்கலையின் கல்வி விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ஏரன் தியன்.

மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறும்போது செயற்கை நுண்ணறிவில் ஓரளவு தேறியவர்களாக இருக்கவேண்டும் என்பதே குறிக்கோள் என்றார் அவர்.

பல்கலைக்கழகத்தின் தாதிமைத் துறையில் பயிலும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள 15 கல்லூரிகள், துறைகள், பள்ளிகளில் கிட்டத்தட்ட 29,600 இளநிலை மாணவர்கள் பயில்கின்றனர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் மாணவர்கள் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டங்களை ஆகஸ்ட் மாதத்திலிருந்து கட்டாயமாக்கும் கொள்கையை ஏப்ரல் மாதம் அறிவித்தது.

கூகலின் உயர்தரச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை மாணவர்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் பல்கலை அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்