மோசடிக் குற்றங்களுக்கு டிசம்பர் 30முதல் கட்டாயப் பிரம்படி

மோசடிக் குற்றங்களுக்கு டிசம்பர் 30முதல் கட்டாயப் பிரம்படி

2 mins read
aa938a67-7384-4169-8570-b60a9c37f729
மோசடிக் குற்றங்களுக்குப் பிரம்படி தண்டனை வழங்குவது பற்றி கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. - படம்: ஆசியா1கோப்புப் படம்

மோசடி மற்றும் அது சார்ந்த குற்றங்களுக்கு பிரம்படி தண்டனை வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அமலாக்கப்படும்.

மோசடிக் கும்பல்களின் உறுப்பினர்களுக்கு ஆறு முதல் 24 பிரம்படிகள் வரை கட்டாய தண்டனையாக விதிக்கப்படும்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த நாடாளுமன்ற விவாதத்தில், பிரம்படிகள், மோசடிக் குற்றங்களுக்கு தகுந்த தண்டனையாக அமையும் என்று உள்துறைஅமைச்சு பரிந்துரை செய்திருந்தது. அதுபோன்ற குற்றங்களைத் தடுக்க பிரம்படிகள் உதவும் எனவும் அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

“மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தேசிய அளவில் நடத்த வேண்டியுள்ளது. மோசடிக் குற்றங்களும் அவற்றால் ஏற்பட்டுள்ள இழப்பும் கவனத்துக் குறிய அளவை எட்டிவிட்டன. சிறந்த தடுப்பு நடவடிக்கையாக உள்துறை அமைச்சு பிரம்படிகளை அறிமுகப் படுத்தவுள்ளது,” என்று அமைச்சு அப்போது தெரிவித்திருந்தது.

இவ்வாண்டு மட்டும் $456.4 மில்லியன் தொகையை மோசடிக்காரர்களிடம் மக்கள் இழந்துள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12.6 விழுக்காடு குறைந்திருந்தாலும் நிலைமை இன்னும் கவனத்துக்குரியதாகவே உள்ளது என்று இணையக் குற்றவியல் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி காவல்துறையினர் கூறியுள்ளனர்.

டிசம்பர் மாதம் 30ஆம் தேதி சட்டம் அமலாக்கப்பட்டதும், மோசடி சார்ந்த குற்றங்கள் புரிவோர்கள் கட்டாய தண்டனையாக ஆறு முதல் 24 பிரம்படிகள் பெறுவர்.

மேலும் மோசடிக்காரர்களுக்குத் துணையாக இருப்போருக்கும் 12 பிரம்படிகள் வரை குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்க சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இடைத் தரகர்களாக கள்ளப்பணத்தை வைத்திருப்போர், தொலைபேசி ‘சிம்’ அட்டைகளைக் கொடுப்போர், சிங்பாஸ் மறைச்சொல்லை வெளியிடுவோர் போன்றவர்கள் குற்றங்களுக்கு துணை புரிவோராகக் கருதப்படுவர்.

குற்றங்களுக்கு ஏற்ப என்பது குற்றவாளிகளுக்குப் பிரம்படி வழங்கும் முடிவை நீதிமன்றங்கள் எடுக்கும் என்று பொருள்படும்.

மோசடிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்