‘பிஎம்ஏ’களுக்கான சான்றிதழ் போதாமல் இருக்கலாம்: நிபுணர்கள்

‘பிஎம்ஏ’களுக்கான சான்றிதழ் போதாமல் இருக்கலாம்: நிபுணர்கள்

2 mins read
1b2a7c72-fa71-49b4-8cb2-28e668a4282a
மூத்தோருக்கும் பல்வேறு மருத்துவச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கும் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப் பயன்படுத்த கூடுதல் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கூடுதலானோருக்குத் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப் (பிஎம்ஏ) பயன்படுத்த வழிகாட்டுதல் தேவைப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சாதனத்தைப் பயன்படுத்தும் மூத்தோருக்கும் பல்வேறு மருத்துவச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கும் அத்தகைய வழிகாட்டுதல் அதிகம் தேவைப்படுகிறது.

அத்தகையோருக்கு இன்னும் விரிவான பயிற்சிகள் அளிக்கப்படுவது அவசியம் என்றும் கருதப்படுகிறது.

தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களுக்கான விதிமுறைகள் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து மேலும் கடுமையாக்கப்பட்டன.

சாதனத்தைப் பயன்படுத்த முற்படுவோர் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் அல்லது தொழில் சிகிச்சை வல்லுநரிடமிருந்து மருத்துவச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம். 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்கள் தொடர்பில் இதுவரை 1,000க்கும் அதிகமான மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

புதிய கட்டுப்பாடுகள் அறிமுகமாவதற்கு முன்னரே ஒவ்வொரு வாரமும் 20லிருந்து 25 பேரைச் சந்திப்பதாக டான் டோக் செங் மருத்துவமனையில் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களின் பயனீட்டாளர்களை மதிப்பிடும் தொழில் சிகிச்சை நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

அது, பல மாதங்களுக்குமுன் இருந்த எண்ணிக்கையைவிட 35 விழுக்காடு அதிகம்.

தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான சான்றிதழ் பெற்றுள்ளபோதும் சாலையில் பயணம் செய்வதற்கு உகந்த நிலையில் இல்லாதோரின் சான்றிதழ்களைத் தொழில் சிகிச்சை வல்லுநர்களால் நிராகரிக்க முடியும்.

ஒருசில பயனீட்டாளர்கள் ஓரிரு பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு உகந்தவர்கள் என்று மதிப்பிடப்படலாம். ஆனால், மற்ற சிலருக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படுவதாகத் தொழில் சிகிச்சை வல்லுநர்கள் கூறினர்.

சிக்கலான சுகாதாரப் பிரச்சினைகள் உள்ள நோயாளிகள், தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப் பயன்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ளலாம் என்றார் டான் டோக் செங் மருத்துவமனையின் தலைமை தொழில் சிகிச்சை வல்லுநர் ஹுவாங் ஹுய்சின்.

குறிப்புச் சொற்கள்