ஏஐ-க்கு தனிநபர் விவரங்களை பயன்படுத்தினால் தெரிவிப்பது அவசியம்: புதிய உத்தேச யோசனை

ஏஐ-க்கு தனிநபர் விவரங்களை பயன்படுத்தினால் தெரிவிப்பது அவசியம்: புதிய உத்தேச யோசனை

3 mins read
9a9b1739-fb89-4485-8df1-651ddd3c9edb
தனிநபர் விவரங்களை ஏஐ மாதிரிகளை உருவாக்கப் பயன்படுத்தினால் அது பற்றி தெரிவிப்பது அவசியம் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. - படம்: அடோப் ஸ்டாக்

செயற்கை நுண்ணறிவு (ஜெனரேட்டிவ் ஏஐ) மாதிரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தனிநபர் விவரங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அது குறித்துப் பயனீட்டாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் விவரங்களைக் கொண்டு நிதிசார்ந்த சுயவிவரங்களை உருவாக்குவது போன்ற எதிர்பாராத புதிய சேவைகளுக்குப் பயிற்சி அளிப்பதைத் தடுப்பதற்கு இந்தத் தற்காப்பு நடவடிக்கை மிகவும் அவசியம் என்று தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் (பிடிபிசி) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன.

புதிய தயாரிப்புக்கான மேம்பாடு எனப் பொதுவாகத் தெரிவிக்காமல் ஏஐ பயிற்சிக்காகத் தனிநபர் விவரங்கள் பயன்படுத்தப்படுத்துவது குறித்து நிறுவனங்கள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் தனது வழிகாட்டி நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், சில்லறை வர்த்தகம் முதல் சமூக ஊடகத் தளங்கள் வரை பல நிறுவனங்களும் தங்களது சேவைகளை மேம்படுத்த ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் இந்தப் புதிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

“ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மற்றவர்களுக்குத் தெரியவரலாம் அல்லது மூன்றாம் தரப்பினரிடம் பகிரப்படலாம் என்ற நியாயமான அச்சம் பொதுமக்களுக்கு இருக்கக்கூடும்,” என்று ஆணையம் தனது ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்த ஒரு மாத கால பொதுக் கலந்தாய்வு கடந்த ஜூலை 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், காணொளி, குரல் பதிவுகள், பணப் பரிவர்த்தனை வரலாறு, இருப்பிட விவரங்கள் போன்றவை இந்த தனிநபர் தரவுகளில் அடங்கும்.

ஏஐ பயன்பாடு குறித்த அறிவிப்பை நிறுவனங்கள் தங்களது செயலிகளின் உள்ளே தோன்றும் அறிவிப்பு செய்தியாகவோ அல்லது அதற்குரிய இணையப் பக்கமாகவோ வெளியிடலாம்.

அந்த அறிவிப்பில், அந்த ஏஐ தொழில்நுட்பம் என்ன செய்யும், அதற்குப் பயனாளர்களின் எந்தெந்த விவரங்கள் தேவைப்படுகின்றன என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் குரலை உரையாக மாற்றும் வசதியை உருவாக்க நினைத்தால், பயனாளர்களின் குரல் பதிவுகள் ஏஐ பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் என்பதை அவர்களிடம் தெளிவாகக் கூற வேண்டும். மேலும், அந்தக் குரல் பதிவுகள் பேச்சின் தன்மைகளைப் புரிந்துகொள்ள ஏஐ-க்கு எவ்வாறு உதவுகின்றன என்பதையும் விளக்க வேண்டும்.

அதே நேரத்தில், தங்களது விவரங்களை தர விரும்பாத பயனாளர்கள், அதிலிருந்து எவ்வாறு விலகலாம் என்ற விவரங்களும் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்தின் ஐந்தாவது ஆணையராகப் பொறுப்பேற்ற டென்னிஸ் வோங்கின் முக்கிய முன்னுரிமைகளில் இந்தப் புதிய வழிகாட்டியும் ஒன்றாகும்.

சிங்கப்பூரின் தரவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தவும், தரவுக் கசிவு குறித்த புகார்களை விசாரிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆணையம் கடந்த 2013 ஜனவரியில் தொடங்கப்பட்டது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் மனிதர்களின் அங்க அடையாளங்களைச் சேகரிக்கும் ஏஐ சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் சிங்கப்பூரின் தரவுப் பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்று டென்னிஸ் வோங் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்