தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அதிக வெப்பத்தால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைக்க, மனிதவள அமைச்சு நடவடிக்கை

வெளிப்புற வேலை செய்யும் ஊழியர்க்கு கட்டாய ஓய்வு

2 mins read
2c15b958-b13c-480c-8db6-165ae93f3642
வெளிப்புறத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் குறைக்க, புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிப்புறங்களில் அதிக வெப்பநிலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குறைந்தது ஐந்து நிமிட ஓய்வை முதலாளிகள் கொடுக்கவேண்டும்.

வெளிப்புற ஊழியர்களுக்கு அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் குறைக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

இது உடனடியாக நடப்புக்கு வருகிறது.

வெப்பத் தாக்கம் குறித்த சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு புதிய நடவடிக்கையை மனிதவள அமைச்சு அறிமுகம் செய்தது.

“பொதுவான மக்கள்தொகையைக் காட்டிலும், வெளிப்புறங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தங்கள் வேலை நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும் உரிமை குறைவாக உள்ளதால், நீண்ட நேரம் அவர்கள் வெயிலில் நிற்கக்கூடும்,” என்று அமைச்சு கூறியது.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செய்யப்படும் வெளிப்புற வேலைக்காக, வெப்பத்தின் அளவைக் கணிக்கும் ‘டபிள்யூபிஜிடி’ எனும் கருவியை முதலாளிகள் கண்காணிக்கவேண்டும்.

கொடுக்கப்படும் ஓய்வு நேரம், அந்த அளவீடுகளைப் பொறுத்திருக்கும் என்று அமைச்சு கூறியது.

‘டபிள்யூபிஜிடி’ அளவீடுகளைக் கண்காணிக்க, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ‘மைஇஎன்வி’ செயலியை முதலாளிகள் பயன்படுத்தலாம்.

$5 மில்லியன் அல்லது அதற்கும் மேல் குத்தகை தொகையைக் கொண்ட கட்டுமானத் தளங்கள், கப்பல் பட்டறைகள், செய்முறை தொழில்துறை ஆகியவை ‘டபிள்யூபிஜிடி’ கருவியைப் பொருத்தவேண்டும்.

அந்த இடங்களில் நீண்டகாலத்திற்கு வெளிப்புறங்களில் பணிகள் மேற்கொள்ளப்படக்கூடும் என்பதால் அவை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.

ஒரு வாரத்திற்கும் மேல் விடுப்பு எடுத்துக்கொண்டு வேலைக்குத் திரும்புவோரும் புதிய ஊழியர்களும் வெளிப்புறங்களில் வேலை செய்யும் நேரத்தைக் குறைந்தது ஏழு நாள்களுக்குக் கட்டங்கட்டமாக அதிகரிக்கவேண்டும்.

வெளிப்புறங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குறைந்தது 300 மில்லிலிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். அவர்கள் நிழலான பகுதியில் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக வெப்பம் இல்லாத நேரங்களில் ஊழியர்களை வெளிப்புற வேலையில் ஈடுபட வைக்க முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அதோடு, வேலையிடங்களிலும் ஓய்விடங்களிலும் காற்றாடிகளையும் காற்றுக் குளிர்கலன்களையும் வைக்கவும் அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்