அடுத்த ஆண்டு முதல் புனித ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொள்ளும் அனைவரும் ஒரு கட்டாய, செல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும்.
ஹஜ்ஜுப் பயணம் நீண்ட நடைப்பயணங்கள், அதிக வெப்பநிலை மற்றும் அதிக கூட்டத்தை உள்ளடக்கியது. பயணத்தை முடிக்க யாத்ரீகர்கள் மருத்துவ ரீதியாகத் தகுதியானவர்கள் என்பதை இந்தச் சான்றிதழ் உறுதிப்படுத்தும்.
அத்துடன், ஹஜ்ஜுப் புனித யாத்திரைக்கு தகுதி பெற்ற, உடலளவில் ஆரோக்கியமானவர்கள் என்று சான்றளிக்கப்பட்ட 70 வயதினருக்கும் அதற்கு மேற்பட்டோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம்.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தில் (முயிஸ்) அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தத் தகவல்களைப் பேராசிரியர் ஃபைஷால் பகிர்ந்தார்.
“மலாய்-முஸ்லிம் சமூகத்தின் மூத்த குடிமக்களை ஆதரிப்பதற்கான எங்கள் முயற்சிகளுடன் இது ஒத்துப்போகிறது,” என்றார் பேராசிரியர் ஃபைஷால்.
2014ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதிக்கு முன்பு யாத்திரைக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் தங்கள் நுழைவுக் கடிதத்தைப் (Letter of Intent) பெறத் தொடங்குவார்கள் என்று முயிஸ் உறுதிப்படுத்தியது.
நுழைவுக் கடிதத்தைப் பெற்ற சிங்கப்பூரர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் தங்கள் மருத்துவச் சுகாதாரச் சான்றிதழைப் பெற வேண்டும்.
மருத்துவப் பரிசோதனையை எந்த ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரும் மேற்கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தியது முயிஸ்.
தொடர்புடைய செய்திகள்
உறுப்புகள் செயலிழப்பு, கடுமையான நரம்பியல் அல்லது மனநலக் கோளாறுகள், தொடர்பு மற்றும் டிமென்ஷியாவுடன் கூடிய முதுமை, அதிக ஆபத்தகளை எதிர்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள், தொற்று நோய்கள் போன்ற மருத்துவ சிக்கல்கள் கொண்ட நோயாளிகள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
மருத்துவ ரீதியாக தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹஜ்ஜுப் பயணத்தை ஒத்திவைப்பது சிறந்தது என்று முயிஸ் அறிவுறுத்தியது.
2026ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கவுள்ள ஹஜ்ஜு யாத்திரைக்கு சிங்கப்பூரிலிருந்து 900 பேர் செல்ல சவூதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சு அனுமதி அளித்துள்ளதாகப் பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார்.
இது 2025ஆம் ஆண்டு ஹஜ்ஜு புனித யாத்திரைக்கு வழங்கப்பட்ட அதே எண்ணிக்கையாகும்.
இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள பலரும் பொறுமையாக காத்திருப்பதைப் பேராசிரியர் ஃபைஷால் சுட்டினார்.
“எதிர்காலத்தில் ஹஜ்ஜுப் பயணம் செல்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க சவூதி அதிகாரிகளுடன் அரசாங்கம் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும்,” என்று அவர் உறுதியளித்தார்.

