அண்டைவீட்டார் பிரச்சினைகளைத் தீர்க்க கட்டாய சமரசமே முதல் படி: எட்வின் டோங்

2 mins read
7fcf8269-398e-470e-bbfb-9a69d81237b5
சமூக உறவை மேம்படுத்தும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அண்டை வீட்டார் பிரச்சினைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்டை வீட்டார் இடையே ஏற்படும் மனக்கசப்பைச் சமாளிப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டங்கள், இரு தரப்பினரிடையே சமரசத்தை ஏற்படுத்தி, உரையாடலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக சர்ச்சை தீர்வுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி அதிகாரிகள், அண்டை வீட்டாரிடையே இருக்கும் பிணக்குகளைச் சரிசெய்யவும் அவர்களின் பிரச்சினைகளை ஆக்கபூர்வமான, நட்பார்ந்த முறையில் தீர்த்து அவர்களிடையே சமரசத்தை ஏற்படுத்தவும் அனுமதிக்கும் எனத் திரு டோங் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 12) நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதன்மூலம் பிரச்சினைகளைச் சுமுகமாக தீர்க்கவும் சமரசத்திற்கு இணங்க மறுக்கும் அண்டை வீட்டாரின் புகார்களைக் கையாளவும் சமரசத்திற்கு இணங்கினாலும் சந்திப்புக்கு வர மறுக்கும் அண்டை வீட்டார்களுக்கு ஆக்ககரமான ஆலோசனை வழங்கவும் முடியும் என்றார் திரு டோங்.

சமூக சர்ச்சைகளை நிர்வகிக்கும் கட்டமைப்பில் மேலும் இரண்டு பெரிய மாற்றங்களை முன்மொழியப்பட்ட சட்டம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அண்டை வீட்டார் இடையே இருக்கும் பிரச்சினைகளை விசாரிக்கவும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் சமூக உறவை மேம்படுத்தும் பிரிவு அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், சமூக சர்ச்சை தீர்வு மன்றங்களில் முன்வைக்கப்படும் புகார்களை விரைவாகவும் திறம்பட கையாளவும் மன்றங்களுக்கு மேம்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் என அவர் விவரித்தார்.

அண்டை வீட்டாரிடையே இருக்கும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை சத்தம் அல்லது கூச்சல் தொடர்புடையவை.

கடந்த மூவாண்டுகளில் அண்டைவீட்டார் போடும் சத்தம் குறித்து 90,000க்கும் மேற்பட்ட புகார்களை அரசு நிறுவனங்கள் பெற்றுள்ளதாகவும் சராசரியாக ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 2,500 புகார்கள் வருவதாகவும் திரு டோங் கூறினார்.

சமூக சமரச நிலையத்தின் மூலம் அண்டை வீட்டார் இடையே இருந்த சர்ச்சைகளைச் சமரசம் செய்து தீர்த்து வைத்ததைச் சுட்டிய திரு டோங், இது விரைவானது, இலவசமானது, பயனுள்ளதும் கூட என்றார்.

“மன்றத்தின் மூலம் 2014ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 2,400க்கும் மேற்பட்ட அண்டை வீட்டார் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

“அதாவது, கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு புகார்களுக்குத் தீர்வு அளிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்