வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவதன் தொடர்பில், ஊழியர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் லாரிகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை வழங்கலாம்.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தும் பணியைத் துரிதப்படுத்த, சிங்கப்பூர் போக்குவரத்துச் சங்கத் தலைவர் லிம் கியன் சின் முன்வைத்த கருத்து அது. 3,500 கிலோகிராமுக்கும் 12,000 கிலோகிராமுக்கும் இடைப்பட்ட அதிகபட்ச எடையில் உள்ள லாரிகளுக்கு வேகக் கட்டுபாடுகள் அவசியம்.
இத்தகைய வாகனங்கள் மணிக்கு 60 கிலோமீட்டருக்கு மேல் செல்லாததை வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உறுதிசெய்யும்.
2024ஆம் ஆண்டிறுதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 50 லாரிகள் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தியுள்ளதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
3,500 கிலோகிராமுக்கும் 12,000 கிலோகிராமுக்கும் இடைப்பட்ட அதிகபட்ச எடையைக் கொண்ட கிட்டத்தட்ட17,000 லாரிகளில் இது ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு என்று 2023 நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வருடாந்தர வாகனப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2024ஆம் ஆண்டு ஜனவரியில், தகுதிபெறும் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கையைத் தொடங்கிய போக்குவரத்துக் காவல்துறை குறைவான விகிதம் குறித்து கவலை தெரிவிப்பதாக திரு சண்முகம் எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார். நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார் திரு சண்முகம்.
50 லாரிகள் மட்டுமே இந்தத் தகுதிவிதியை நிறைவேற்றியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு இங் கூறினார்.
“இது கட்டாயமாக்கப்படுவதற்கு (2026 முதல்) இன்னும் சில காலம் உள்ளது,” என்று திரு இங் கூறினார். இதற்கிடையே, நூறாயிரக்கணக்கான ஊழியர்களின் உயிர் ஆபத்தில் இருப்பதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மேலும் அதிகமான லாரி ஓட்டுநர்கள் முன்கூட்டியே வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவதை ஊக்குவிக்க, அதிகாரம்பெற்ற வாகன விநியோகிப்பாளர்கள், சிங்கப்பூர் வாகன வர்த்தகர்கள் சங்கம், அதிகாரம்பெற்ற சோதனை நிலையங்கள் ஆகியவற்றுடன் போக்குவரத்துக் காவல்துறை இணைந்து செயல்பட்டு வருவதாக திரு சண்முகம் கூறியுள்ளார்.