சைனாடவுன் வீவக புளோக் தாழ்வாரத்தில் ஆடவரின் உடல்

1 mins read
afa7aaa8-e466-4f31-99d2-1fdfeb4abcdf
வீவக புளோக்கின் தாழ்வாரத்தில் 54 வயது நபர் ஒருவர் அசைவில்லாமல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஷின் மின்

ஜனவரி 7ஆம் தேதி அதிகாலையில் சைனாடவுனில் உள்ள புளாக் 333 கிரேத்தா ஆயர் சாலையில் உள்ள கூரையுடன் கூடிய நடைபாதையில் 54 வயதுடைய ஆடவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் காட்சிகளை தனது கேமராவில் படம்பிடித்த ஒருவர், ஷின் மின் நாளிதழுடன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கின் இரண்டாவது மாடி நடைபாதையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது என்று புகைப்படத்தைப் பகிர்ந்த நபர் கூறினார்.

புகைப்படத்தில், இரண்டாவது மாடியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே நீல நிறக் கூடாரத்தைக் காண முடிந்தது.

முதல் மாடியில் உள்ள நடைபாதையையும் படிக்கட்டுகளையும் காவல்துறையினர் தடுப்பு போட்டு வளைத்திருந்தனர்.

மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஜனவரி 7ஆம் தேதி அதிகாலை 5.50 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி கோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியது.

வீவக புளோக்கின் தாழ்வாரத்தில் 54 வயது நபர் ஒருவர் அசைவில்லாமல் காணப்பட்டதாகவும் அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஆடவரின் மரணத்தை உறுதிப்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணத்தில் சூது இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என்றும் விசாரணை தொடர்கிறது என்றும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்