தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங் தீ விபத்து; மாண்டோரில் ஆடவரின் உடல் அடையாளம் காணப்பட்டது

2 mins read
58b2541d-6366-4220-b9c0-f1a32b8e5b7e
தீச்சம்பவம் நடந்த குடியிருப்பை ஆய்வுசெய்யும் தீயணைப்பு வீரர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹவ்காங் வட்டாரத்தில் புளோக் 971 ஹவ்காங் ஸ்திரீட் 91ன் மூன்றாவது மாடியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்று தீ மூண்டதில் மூவர் மாண்டனர். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை (ஜனவரி 9) பிற்பகல் 12.40 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. ஐந்தறைகள் கொண்ட அந்த வீட்டில் 62 வயது திரு லீ சூன் கீக், 56 வயதான தனது மனைவி திருவாட்டி சியோவ் சிவ் சூ உடன் வசித்ததாகக் கூறப்பட்டது.

அந்தத் தம்பதியினருடன் அவர்களின் பதின்ம வயது மகள் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. திரு லீயின் உடல் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

தீச்சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றவர்களின் உடல்களில் அதிகளவிலான தீக்காயங்கள் இருப்பதால், அவற்றை அடையாளம் காண்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புரிந்துகொள்கிறது.

திரு லீ 1992ஆம் ஆண்டு திருவாட்டி சியோவை மணந்ததாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தக் குடும்பம் 2019ஆம் ஆண்டு முதல் ஹவ்காங்கில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வந்தனர். அந்தக் குடியிருப்பு எப்போதும் இரைச்சலாக இருந்ததாகவும் அந்தத் தம்பதியினர் பூனை, பறவை, முயல் உட்பட பல செல்லப்பிராணிகளை வளர்த்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதனால், குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் நடைபாதையில் துர்நாற்றம் வீசியதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், அந்தக் குடும்பத்தினர் நிறைய பொருள்களைக் கொண்டுவந்து அவற்றை வீட்டிற்குள் எடுத்துசெல்லாமல் வாசலிலேயே விட்டுசெல்வர் என்றும் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கு அருகில் வசித்தவர்கள் குறிப்பிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கு அருகில் வசித்தவர்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தீச்சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினம் இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கு அருகில் வசித்த மாது ஒருவர் கூறினார். வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) காலை 8 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஜனவரி 9ஆம் தேதி இரவு நேரத்தைத் தனது மகளின் குடியிருப்பில் கழித்ததாகவும் அந்த மாது வேதனையுடன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்