டிசம்பரில் உற்பத்தித்துறை 8.3 விழுக்காடு வளர்ச்சி

2 mins read
2339df32-f7d9-4fcc-8ebb-00079dfbfa78
புளூம்பெர்க் ஆய்வில் பங்கேற்ற பொருளியல் நிபுணர்கள் கணித்திருந்த 7.5 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை உற்பத்தித் துறை எட்டியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை நான்கு மாத தொடர் வளர்ச்சியோடு 2025ஆம் ஆண்டை நிறைவுசெய்துள்ளது.

ஆண்டு அடிப்படையில் டிசம்பர் மாதத்தில் அதன் வளர்ச்சி 8.3 விழுக்காடாகப் பதிவாகி உள்ளதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் திங்கட்கிழமை (ஜனவரி 26) வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.

புளூம்பெர்க் ஆய்வில் பங்கேற்ற பொருளியல் நிபுணர்கள் கணித்திருந்த 7.5 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது அதிகம்.

மின்னணு மற்றும் போக்குவரத்துப் பொறியியல் துறைகளின் வளர்ச்சி, உற்பத்தித் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தன.

ஏற்ற இறக்கம் அதிகமாகக் காணப்படும் உயிர்மருத்துவ உற்பத்திப் பிரிவை நீக்கிவிட்டு கணக்கிடுகையில், உற்பத்தித் துறையின் வளர்ச்சி 16 விழுக்காட்டைத் தொட்டது.

டிசம்பர் மாத வளர்ச்சியும் சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் மீள்திறனையே உணர்த்துவதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்தப் புதிய ஆண்டிலும் அதேபோன்ற வளர்ச்சி நீடிக்குமா என்பதை அவர்கள் எச்சரிக்கையுடன் உற்றுநோக்குகின்றனர்.

பகுப்பாய்வாளர்களில் ஒருவரான டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளியல் நிபுணர் சுவா ஹான் டெங், 2025ஆம் ஆண்டில் கண்ட வலுவான வளர்ச்சியை இந்த ஆண்டிலும் உற்பத்தித் துறை பெறுவது சந்தேகம் என்று கூறினார்.

வளர்ச்சியைத் தடுக்கும் பல்வேறு சாத்தியக் கூறுகளையும் அவர் விளக்கினர்.

2025ஆம் ஆண்டைக் காட்டிலும் உறுதிமிக்க அடித்தளம் இருக்க வேண்டியதன் அவசியத்தை உற்பத்தித் துறை எதிர்நோக்குகிறது.

அத்துடன், டிரம்ப் விதித்த வரிகளால் ஏற்படக்கூடிய சவால்களையும் அந்தத் துறை சமாளிக்க வேண்டி உள்ளது.

வலுவான வளர்ச்சியை மின்னணுப் பிரிவு பதிவு செய்யும் அதேநேரம் அந்தத் துறை சாராத பிரிவுகளின் பலவீனம் இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களிலும் தொடரும் சாத்தியம் உள்ளதாக திரு சுவா குறிப்பிடுகிறார்.

“அதிகமான அமெரிக்க வரிகளால் உலகம் சந்திக்கும் பாதிப்பு தாமதமாக உணரப்படும்போது மின்னணு அல்லாத பொருள்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மீது அதிக வெளிப்புற அழுத்தங்கள் இருக்கக்கூடும்,” என்றார் அவர்.

மின்னணுப் பிரிவு சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் மூன்றில் ஒரு பங்கை வகிக்கிறது. அந்தப் பிரிவின் உற்பத்தி டிசம்பர் மாதத்தில் 30.8 விழுக்காடாகப் பதிவானது.

ஒட்டுமொத்தமாக, 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 12.7 விழுக்காடு வளர்ச்சியை மின்னணுப் பிரிவு எட்டியது.

குறிப்புச் சொற்கள்