மின்சிகரெட், கேபோட்டுக்கு அடிமையான பலர் ‘ஐஎம்எச்’சிடம் உதவி நாடினர்

மின்சிகரெட், கேபோட்டுக்கு அடிமையான பலர் ‘ஐஎம்எச்’சிடம் உதவி நாடினர்

2 mins read
10ab6697-2828-4a64-9ef0-1a20658f375f
அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகள், கேபோட் என்றழைக்கப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் ஆகியவற்றுக்கு அடிமையான 470க்கும் மேற்பட்டோர் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து மனநலக் கழகத்தில் (ஐஎம்எச்) உதவி நாடியிருக்கின்றனர்.

பலர் தாங்களே மின்சிகரெட் பழக்கத்தைக் கைவிட முயற்சி செய்தனர். ஆனால், அது அவர்களுக்கு சவாலாக இருந்திருக்கிறது.

மின்சிகரெட் பழக்கத்துக்கு அடிமையான சிலர் தங்களின் வேலையையும் இழந்திருக்கின்றனர்.

செப்டம்பர் முதல் மே வரை

சென்ற ஆண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து இவ்வாண்டு மே மாதம் 31ஆம் தேதி வரை 141 பேர் குவிட்வேப் எனப்படும் மின்சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவுவதற்கான தங்களின் திட்டத்தில் சேர்ந்துகொண்டதாக மனநலக் கழகம் தெரிவித்தது. அத்திட்டம், மனநலக் கழகத்தின், பழக்கங்களுக்கு அடிமையாவோரைக் கவனிக்கும் தேசிய சேவை (என்ஏஎம்எஸ்) மருந்தகத்தில் நடத்தப்படுகிறது.

தேசிய மறுவாழ்வுத் திட்டமான அது சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொருவருக்கும் நேரடியாக நான்கு மனநல ஆலோசனை அமர்வுகள் வழங்கப்படுகின்றன; பங்கேற்பாளர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டும் இரு அமர்வுகள் வழங்கப்படுகின்றன.

கட்டாய எட்டோமிடேட் மறுவாழ்வுத் திட்டம்

குவிட்வேப் திட்டத்தைத் தவிர மேலும் 334 பேர் மனநலக் கழகத்தின் கட்டாய எட்டோமிடேட் மறுவாழ்வுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நடவடிக்கை, சம்பந்தப்பட்டோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மேற்கொள்ளப்படுகிறது. எட்டோமிடேட் கலந்த கேபோட்களுக்கு அடிமையானோர் அப்பழக்கத்தைக் கைவிடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மனநல ஆலோசனை வழங்குவது, ஆதரவளிப்பது ஆகியவற்றில் அந்தக் கட்டாயத் திட்டம் கவனம் செலுத்தும்.

கேபோட்களைப் பயன்படுத்திய பலர் உதவி நாடினர்; அதேவேளை சட்டத்திடம் சிக்கிக்கொள்ளாமல் எங்கு உதவி நாடுவது என்பது பலருக்குத் தெரியாமல் இருந்ததாக என்ஏஎம்எஸ் திட்டத்தின் மூத்த மனநல ஆலோசகரான லீ வீ கீ தெரிவித்தார்.

கேபோட்களைப் பயன்படுத்திய பெரும்பாலானோர் மின்சிகரெட் பழக்கத்தை எளிதில் நிறுத்திவிடலாம் என்று நினைப்பதாகவும் அதில் உள்ள சிக்கலைப் பின்னர் உணர்வதாகவும் லீ தெரிவித்தார்.

எட்டோமிடேட்டுக்கு அடிமையானதால் தங்கள் உறவுகளில் பிரச்சினைகள் ஏற்பட்ட பிறகு சிலர் உதவி நாடியதாக அவர் சொன்னார். வேறு சிலர் வேலை நேரத்தில் எட்டோமிடேட்டைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அதன் காரணமாக வேலையில் சரியாகச் செயல்படாததால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மின்சிகரெட்மனநலம்உதவி