சக மனிதர்களைக் காட்டிலும் செல்லப் பிராணிகள் சிலருக்கு அதிக நிம்மதியைத் தரக்கூடும்.
செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில் 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்ற புதிய உலகளாவிய கருத்தாய்வில் 58 விழுக்காட்டினர், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரைக் காட்டிலும் பிராணிகளுடன் நேரத்தைச் செலவழிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். செல்லப் பிராணிகளின் பராமரிப்பு வர்த்தகமான மார்ஸ், மனநல ஆய்வு நிறுவனமான காம் ஆகியவை நடத்திய இந்த ஆய்வில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் 83 விழுக்காட்டினர், தங்களது மனநலத்தின் மீது செல்லப் பிராணிகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டனர். மனநலத்தையும் உடல்நலத்தையும் செல்லப் பிராணிகள் எப்படியெல்லாம் மேம்படுத்துகின்றன என்பதையும் உலகளாவிய கருத்தாய்வு விவரித்தது.
கணினி, திறன்பேசியின் திரைகளை அதிக நேரம் உற்றுப் பார்க்காமல் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கும் செல்லப் பிராணிகள் ஊக்குவிக்கின்றன. வேலையில் எப்போதும் மூழ்கியிருப்பவர்களுக்கு நல்ல சமநிலை ஏற்படுகிறது.
கவலை, தனிமை ஆகியவற்றைத் தொடர்ந்து உணர்வோர், செல்லப்பிராணியைப் பராமரிக்கும்போது அவர்களிடத்தில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இத்தகைய நல்ல விளைவுகளை மில்லியன் கணக்கானோர் உணர்கின்றனர் என்றது ஆய்வு.
மனிதர்கள் பிறருக்குப் பயனுள்ளவர்களாக இல்லையென்றால் அவர்கள் அன்பும் அபிமானமும் அவ்வளவு எளிதாகப் பெற முடியாது. செல்லப் பிராணிகளுக்கு பேசும் ஆற்றல் இல்லை என்றாலும் அவற்றின் சின்னஞ்சிறு ஊடாடல்கள் நம் மனத்தில் பால்வார்க்கின்றன.
செல்லப்பிராணிகளால் அளவுக்கு அதிகமாக யோசிப்பதையும் கவலைப்படுவதையும் குறைத்துக்கொள்ள இயல்வதாக கருத்தாய்வில் பங்கேற்றோரில் 73 விழுக்காட்டினர் கூறுகின்றனர். குறிப்பாக, நாய்களை வைத்திருப்போர் வெளியே சென்று உலாவுவதற்கு ஊக்கம் பெறுகின்றனர்.
“நாம் அமைதி காக்கும் சிறிய, விழிப்புமிக்க தருணங்கள் நமது ஒட்டுமொத்த நலன் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் நன்கு பராமரிக்கும் செல்லப் பிராணிகள் நம்மையே எதிர்பாராத விதங்களில் பராமரிக்கும்,” என்று காம் நிறுவனத்தின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கிரிஸ் மெஸுனிக் தெரிவித்தார்.