மேலும் பல நிறுவனங்கள் பணியமர்த்தலை முடக்க திட்டமிட்டுள்ளன: ஆய்வு

2 mins read
e95011f5-ab0d-40e9-b470-590db226fb99
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 72 விழுக்காடு, நிச்சயமற்ற வர்த்தகக் கண்ணோட்டத்தை எதிர்பார்க்கின்றன. - படம்: சாவ்பாவ்

இந்த ஆண்டு நிச்சயமற்ற வர்த்தக வாய்ப்புகள் இருப்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அடுத்த ஆண்டு பணியமர்த்துதலை நிறுத்துவது மற்றும் ஊதியக் குறைப்பு ஆகியவற்றுக்கு அவை திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 72 விழுக்காடு நிச்சயமற்ற வர்த்தகக் கண்ணோட்டத்தை எதிர்பார்க்கின்றன. இந்த விகிதம் 2024ல் 58 விழுக்காடாக இருந்தது.

ஆய்வின்படி, கிட்டத்தட்ட ஐந்து நிறுவனங்களில் மூன்று, அதாவது 58 விழுக்காடு, 2026ஆம் ஆண்டில் ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளன. இது 2024ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விகிதமான 50 விழுக்காட்டுக்கும் அதிகம். 50 அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய நிறுவனங்கள் அதாவது 63 விழுக்காடு அவ்வாறு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும், இந்த ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள, ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 8 விழுக்காடு, கடந்த ஆண்டு இதை மேற்கொண்ட நிறுவனங்களின் 9 விழுக்காடு விகிதத்துடன் ஒத்திருந்தது. 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தும் பெரிய நிறுவனங்களில் 12 விழுக்காடு, இதுபோன்ற மனிதவளக் குறைப்புகளைச் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி, பணியமர்த்தலை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

ஊதியக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் பாதிக்கும் குறைவானவை (48 விழுக்காடு), வரவிருக்கும் நிதியாண்டில் ஊதியக் குறைப்பு அல்லது ஊதிய முடக்கத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறின.

இதனை 2025 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 10 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகமாகும். முந்தைய ஆண்டைவிட குறைந்த ஊதிய உயர்வை வழங்குவதற்கான திட்டங்களை நிறுவனங்கள் சுட்டிக்காட்டின.

“இது நிறுவனங்களிடையே, குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களிடையே ஊதியக் கண்ணோட்டத்தில் அதிக எச்சரிக்கையைக் காட்டுவதாக உள்ளது,” என்று சம்மேனளம் தெரிவித்துள்ளது. 51 முதல் 200 ஊழியர்களைக் கொண்டவை, நடுத்தர அளவிலான நிறுவனங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

அடுத்த 12 மாதங்களுக்கு நிறுவனங்களால் குறிப்பிடப்படும் முக்கிய மனிதவளச் சவாலாக, அதிகரித்து வரும் செலவுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் 79 விழுக்காடாக உள்ளன. இது 2024ல் இருந்த 81 விழுக்காட்டுடன் கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது.

மேற்கோள் காட்டப்பட்ட பிற சவால்களில், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களை ஈர்ப்பது மற்றும் தக்கவைத்துக்கொள்வதும் 47 விழுக்காடாகவும், உயர் ஆற்றல் உடைய, உள்ளூர் திறனாளர்களின் பற்றாக்குறை 42 விழுக்காடாகவும் சுட்டிக்காட்டப்பட்டன.

குறிப்புச் சொற்கள்