மார்ச் 14 முதல் 17ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகளுக்காக தானா மேரா மற்றும் எக்ஸ்போ எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்போது, பயணிகள் பயணம் செய்ய இடைவழிப் பேருந்துச் சேவை வழங்கப்படும்.
ஷட்டல் 8 (எஸ்8) என்ற பெயரிலான இந்தச் சேவை, தானா மேரா மற்றும் எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையே ஐந்து முதல் எட்டு நிமிட இடைவெளியில் இயங்கும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் மார்ச் 10ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 14, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் முதல் இடைவழிப் பேருந்து தானா மேரா எம்ஆர்டி நிலையத்தின் நுழைவாயில் 2லிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்பட்டு, எக்ஸ்போ நிலையத்தின் நுழைவாயில் ‘பி’யில் பயணிகளை இறக்கிவிடும். கடைசிப் பேருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்படும்.
மார்ச் 15ஆம் தேதியன்று இதே வழித்தடத்தில் முதல் பேருந்து காலை 5.37 மணிக்கும் கடைசிப் பேருந்து இரவு 11.55 மணிக்கும் புறப்படும்.
மார்ச் 14, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் முதல் பேருந்து எக்ஸ்போ எம்ஆர்டி நிலையத்தின் நுழைவாயில் ‘பி’யிலிருந்து காலை 5.24 மணிக்குப் புறப்பட்டு, தானா மேரா நிலையத்தின் நுழைவாயில் 1ல் பயணிகளை இறக்கிவிடும். கடைசிப் பேருந்து நள்ளிரவு 12.16 மணிக்குப் புறப்படும்.
மார்ச் 15ஆம் தேதியன்று இதே வழித்தடத்தில் முதல் பேருந்து காலை 5.49 மணிக்கும் கடைசிப் பேருந்து பின்னிரவு 12.16 மணிக்கும் புறப்படும்.
இந்த இடைவழிப் பேருந்துச் சேவைக்கு ரயில் பயணத்துக்கு இணையான கட்டணமே வசூலிக்கப்படும்.

