மார்ச் 18 முதல் தகுதிபெறும் ‘சிம்ப்ளிகோ’ பயனர்கள் புதிய ஈஸிலிங்க் அட்டைகளைப் பெறலாம்

மார்ச் 18 முதல் தகுதிபெறும் ‘சிம்ப்ளிகோ’ பயனர்கள் புதிய ஈஸிலிங்க் அட்டைகளைப் பெறலாம்

2 mins read
1cb82a0d-d873-469b-890b-2eaafc5e21b7
ஜனவரி 9க்கும் ஜனவரி 22க்கும் இடைப்பட்ட காலத்தில் தங்கள் அட்டைகளை ‘சிம்ப்ளிகோ’வுக்கு மாற்றிய அல்லது ‘சிம்ப்ளிகோ’ ஈஸிலிங்க் அட்டையை வாங்கிய பெரியோர், புதிய அட்டைகளுக்குத் தகுதிபெறுவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மார்ச் 18 முதல் ஜூன் 30 வரை, தங்களின் பயண அட்டைகளை ‘சிம்ப்ளிகோ’ கணக்கு அடிப்படையிலான பயணச்சீட்டு முறைக்கு மாற்றிய பெரியோர், பழைய அட்டை அடிப்படையிலான பயணச்சீட்டு முறையில் பயன்படுத்தக்கூடிய புதிய ஈஸி லிங்க் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தீவு முழுவதும் உள்ள 44 பயணச்சீட்டு அலுவலகங்களில் இருந்து அவர்கள் புதிய அட்டைகளைப் பெறலாம்.

இதன்மூலம், கட்டண வாசிப்பான்களில் அவர்கள் கட்டணக் கழிவுகளையும் அட்டையில் எஞ்சிய தொகையையும் பார்க்க முடியும். ‘சிம்ப்ளிகோ’ முறையில் அந்த அம்சம் கிடையாது.

ஜனவரி 9க்கும் ஜனவரி 22க்கும் இடைப்பட்ட காலத்தில் தங்கள் அட்டைகளை ‘சிம்ப்ளிகோ’வுக்கு மாற்றிய அல்லது ‘சிம்ப்ளிகோ’ ஈஸி லிங்க் அட்டையை வாங்கிய பெரியோர், புதிய அட்டைகளுக்குத் தகுதிபெறுவர்.

புதிய அட்டைகளைப் பெற்ற பிறகும் அவர்கள் பழைய முறையில் பயன்படுத்தக்கூடிய தங்கள் ‘சிம்ப்ளிகோ’ அட்டைகளையும் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

அட்டைகளைப் பெறுவதற்கான செயல்முறை, பயனர் ஒருவரின் ‘சிம்ப்ளிகோ’ ஈஸிலிங்க் அட்டையின் அடையாள எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

ஜனவரி 9 முதல் ஜனவரி 22க்குள் ‘நெட்ஸ் பிரீபெய்டு’ அட்டையை வாங்கியவர்கள், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ அட்டையையும் பயணச்சீட்டு அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அந்த ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ அட்டையை, அட்டை அடிப்படையிலான முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சலுகை அட்டை வைத்திருக்கும் மூத்தோர், உடற்குறையுள்ளோர், குறைந்த வருமான ஊழியர்கள் ஆகியோருக்கும் பெரியோருக்கான மாதாந்திரப் பயண அட்டை வைத்திருப்போருக்கும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் மே 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மாற்று அட்டைகள் அஞ்சல்வழி அனுப்பப்படும்.

அதற்குத் தகுதிபெற அவர்களுக்கு ‘சிம்ப்ளிகோ’அட்டைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஜனவரி 22ஆம் தேதி அல்லது அதற்கும் முன்னதாக அவர்கள் தங்கள் பயண அட்டைகளை கணக்கு அடிப்படையிலான முறைக்கு மாற்றியிருக்க வேண்டும்.

அட்டை அடிப்படையிலான முறையை குறைந்தது 2030ஆம் ஆண்டுவரை பயன்பாட்டில் வைத்திருக்க அரசாங்கம் $40 மில்லியன் செலவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்