கடந்த மார்ச் மாதம் மூன்று நாள்களுக்கு கிட்டத்தட்ட 720,000 வாடிக்கையாளர்களைப் பாதித்த ஆகப்பெரிய கைப்பேசிக் கட்டமைப்புச் சேவைத் தடங்கலுக்காக சிங்டெல் நிறுவனத்திற்கு $1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 16, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த அந்தச் சேவைத் தடங்கல், இணையம் வாயிலாகப் பணம் அனுப்பும் சேவைகள், டாக்சி சேவைகள், உணவு விநியோகச் சேவைகள் போன்றவற்றைப் பாதித்தது.
அபராத அறிவிப்பை உள்ளடக்கிய அறிக்கையை தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) வெளியிட்டது.
சிங்டெல் தொலைத்தொடர்பு நிலையத்தின் குளிரூட்டும் கட்டமைப்பில் மார்ச் 16ஆம் தேதி கோளாறு ஏற்பட்டதாகவும் சேவை முடக்கத்திற்கு அதுவே காரணம் என்றும் தெரியவந்ததாக ஆணையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் கோளாற்றால் கைப்பேசிக் கட்டமைப்புச் சாதனங்கள் அதிக வெப்பமடைந்து செயலிழந்தன.
பராமரிப்புப் பணிக்குப் பிறகு, தரப்படுத்தப்பட்ட நடைமுறையை சேவை நிறுவனம் ஒன்று பின்பற்றத் தவறியதும் சிங்டெல் நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பு இல்லாததுமே சாதனங்கள் வெப்பமடைந்ததற்குக் காரணம் என்றது ஆணையம்.
ஆரம்பக்கட்ட சேவைப் பாதிப்பைத் தொடர்ந்து, 5ஜி கைப்பேசிப் போக்குவரத்து மற்றொரு சிங்டெல் தொலைத்தொடர்பு நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது.
ஆனால், அங்கு செயலிழக்கச் செய்யப்பட்ட சாதனமும் பிழையான மென்பொருளும் இருந்ததால் அதிகரித்த கைப்பேசிப் போக்குவரத்தை அந்த நிலையத்தால் கையாள இயலவில்லை. அதனால், மார்ச் 18, 19 தேதிகளில் சில சிங்டெல் சந்தாதாரர்களுக்கு அவ்வப்போது இணையத் தொடர்பு பாதித்த வண்ணம் இருந்தது.
“அந்தச் சம்பவங்களைத் தடுத்திருக்க முடியும் என்பதும் அவை சிங்டெல்லின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவைதான் என்பதும் அது இணையத் தாக்குதலால் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் முடிவாகியுள்ளது,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு சாதனங்கள், கண்ணாடி இழை விநியோகக் கம்பிவடங்கள், விரிவலை மற்றும் கைப்பேசிக் கட்டமைப்புப் போக்குவரத்தை வழிநடத்தும் உள்கட்டமைப்புகள் போன்றவற்றை வைத்திருக்கும் இடமே தொலைத்தொடர்பு நிலையம் ஆகும்.
“பாதிக்கப்பட்ட நிலையத்தில் உள்ள குளிரூட்டும் அமைப்பின் செயல்பாடுகளைச் சிறப்பாகக் கண்காணிக்க சிங்டெல் வலுவான கட்டமைப்புகள், நடைமுறைகள் மற்றும் அமைப்புகளைச் செயல்படுத்தியிருந்தால் மார்ச் 16ஆம் தேதி ஏற்பட்ட சேவை முடக்கத்தைத் தடுத்திருக்க முடியும்,” என்று ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சிங்டெல் நிறுவனத்துக்கு இதற்கு முன்னரும் பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டது.
2024 அக்டோபர் மாதம் 500,000க்கும் மேற்பட்ட பயனர்களை நான்கு மணி நேரத்திற்கு மேல் பாதித்த சேவை முடக்கத்திற்காக 2025 டிசம்பர் மாதம் அந்நிறுவனத்துக்கு $1 மில்லியன் அபராதத்தைத் தகவல் தொடர்பு ஊடகம் மேம்பாட்டு ஆணையம் விதித்தது.
