இவ்வாண்டின் ஃபார்முலா 1 சிங்கப்பூர் கிரோண்ட் பிரி பந்தயத்தை நேரில் காணத் தாம் எடுத்துள்ள முடிவை பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் தற்காத்துப் பேசியுள்ளார்.
எஃப்1 பந்தயம், தமது அதிகாரத்துவப் பயணங்கள் இடம்பெறும் காலத்தில் நடப்பதாகவும் அதன் மூலம் முதலீடு செய்யக்கூடிய தரப்புகளைத் தாம் சந்திக்க வாய்ப்புகள் அமைவதாகவும் திரு மார்க்கோஸ் தெரிவித்தார். ஆண்டுதோறும் சிங்கப்பூரில் நடந்துவரும் எஃப்1 பந்தயம், வர்த்தக மாநாடுகளும் சந்திப்புகளும் அதை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் அளவுக்கு முக்கிய அனைத்துலக நிகழ்ச்சியாக வளர்ந்திருப்பதாக வியாழக்கிழமை (அக்டோபர் 8) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடந்த சிறப்பு நேர்காணலில் திரு மார்க்கோஸ் கூறினார்.
இது ஒரு மகிழ்ச்சி தரும் தற்செயலான நிகழ்வாக அவர் வகைப்படுத்தினார்.
பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் எஃப்1 பந்தயத்தை நேரில் வந்து காணுமாறு திரு மார்க்கோசுக்கு அழைப்பு விடுத்தார். பந்தயம் நடக்கும் வார இறுதியில் இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு, வட்டார நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துபேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு மார்க்கோஸ் எஃப்1 பந்தயத்துக்காக சிங்கப்பூர் வருவது பிலிப்பீன்சில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் தொடர்பிலான மிகப்பெரிய ஊழல் விவகாரத்தை அந்நாடு கையாளும் வேளையில் திரு மார்க்கோஸ் இப்பயணத்தை மேற்கொள்வது அவசியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரு மார்கோசின் பயணத்துக்கான செலவை பிலிப்பீன்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சிங்கப்பூருக்கான அந்நாட்டுத் தூதர் மேடார்டோ மக்காராய்க் புதன்கிழமை (அக்டோபர் 7) தெரிவித்தார்.
