சூதாட்டக்கூட, ஹோட்டல் நிறுவனமான மரினா பே சேண்ட்ஸ், இரண்டாம் காலாண்டில் சாதனை அளவிலான வருவாயைப் பதிவுசெய்துள்ளது. அதன் நிகர வருவாய் ஓராண்டுக்கு முன்பு US$1.02 பில்லியனாக இருந்த நிலையில், 37 விழுக்காடு அதிகரித்து US$1.39 பில்லியனாக (S$1.77 பி.) உயர்ந்துள்ளது.
இது, ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான சரிசெய்யப்பட்ட சொத்து வருவாயை (வட்டி, வரிகள், மதிப்பிறக்கம், கடன்தீர்வுக்கு முன்) 50 விழுக்காடு அதிகரித்து US$512 மில்லியனிலிருந்து US$768 மில்லியனாக உயர்த்தியுள்ளது.
மரினா பே சேண்ட்சின் சூதாட்டக்கூட வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அது US$706 மில்லியனாக இருந்த நிலையில், 51.3 விழுக்காடு அதிகரித்து US$1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
காலாண்டுக்கான ஹோட்டல் வருவாய் 8 விழுக்காடு அதிகரித்து US$134 மில்லியனாக கூடியுள்ளது. இருப்பினும், ஹோட்டல் அறைகள் நிரப்பப்பட்ட விகிதம் 95.3 விழுக்காட்டிலிருந்து 95 விழுக்காடாக சற்றுக் குறைந்துள்ளது.
சராசரி அன்றாட அறை வாடகை 11.4 விழுக்காடு அதிகரித்து US$888ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஓர் அறைக்கான வருவாய் 2024 இரண்டாம் காலாண்டில் US$759ஆக இருந்த நிலையில், US$844ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மரினா பே சேண்ட்சின் தலைமை நிறுவனமான லாஸ் வேகஸ் சேண்ட்ஸ், தனது $8 பில்லியன் சிங்கப்பூர் விரிவாக்கத்திற்கு நிலத்திற்கான கூடுதல் கட்டணத்தைச் செலுத்த, சிங்கப்பூர் கடன் வசதியிலிருந்து $1.13 பில்லியன் தொகையை எடுத்ததாகவும் வெளிப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர், மக்காவ் சூதாட்டக்கூடங்களின் பலத்தால், தலைமை நிறுவனமான லாஸ் வேகஸ் சேண்ட்சின் வருவாய் 15 விழுக்காடு அதிகரித்து US$3.18 பில்லியனாக கூடியுள்ளது. எல்எஸ்இஜி சேகரித்த தரவுகளின்படி, ஆய்வாளர்கள் கணித்த US$2.83 பில்லியனை இது விஞ்சியுள்ளது.