மரினா பே சேண்ட்ஸ் ஒருங்கிணைந்த உல்லாசத்தலத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 10.3 விழுக்காடு சரிவடைந்துள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் அதன் ஈட்டம் 689 மில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 768 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
நிறுவனத்தின் நிகர வருவாய் 0.6 விழுக்காடு குறைந்து 1.38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெற்றதால் வாடிக்கையாளர்கள் வருகை சற்றே குறைந்ததே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இக்காலாண்டில் சூதாட்டக் கூடத்தின் வருவாய் 4.1 விழுக்காடு சரிந்து, 1 பில்லியன் டாலராகக் குறைந்தது. எனினும், பொதுச் சூதாட்டப் பிரிவின் வருவாய் 5 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
அதேவேளையில், ஹோட்டல் அறைகள் மூலம் கிடைத்த வருவாய் 12.7 விழுக்காடும், உணவு மற்றும் பானங்கள் துறை வழியிலான வருவாய் 16.7 விழுக்காடும் அதிகரித்தன.
ஹோட்டல் அறைகளின் சராசரி பயன்பாட்டு விகிதம் 95.6 விழுக்காடாக உயர்ந்தது. லாபம் குறைந்தபோதிலும் நிறுவனத்தின் வர்த்தகச் செயல்திறன் வலுவாக உள்ளதாகத் தாய் நிறுவனமான லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், மரினா பே சேண்ட்சின் விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

