மரினா பே சேண்ட்சின் நான்காவது ஹோட்டல் 10.3 பில்லியன் செலவில் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோட்டலுக்கான நில அகழ்வு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், தெற்கின் நீர்முகப்பை உருமாற்ற சிங்கப்பூர் கொண்டுள்ள துடிப்புமிக்க திட்டங்களில் மரினா பே ஒரு பகுதி என்றார்.
கரையோரப் பூந்தோட்டங்கள் தொடங்கி பாசிர் பாஞ்சாங்வரை நீளும் 30 கிலோமீட்டர் கடற்கரை முகப்பு மரினா பேயைவிட ஆறு மடங்கு பெரியது.
அங்கு இன்னும் கூடுதலான வர்த்தக, பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். அவற்றோடு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் அடங்கிய புதிய குடியிருப்பும் உருவாக்கப்படும்.
கெப்பல் மனமகிழ் மன்றம் இருந்த இடத்தில் கட்டப்படும் கிட்டத்தட்ட 1,000 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம், புதுப்பிப்போம், முன்னேறுவோம்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
மரினா மே சேண்ட்ஸ் டவர் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற நில அகழ்வு நிகழ்ச்சியில் பிரதமர் வோங் கிட்டத்தட்ட 200 பேர் முன்னிலையில் உரையாற்றினார்.
மரினா பே சேண்ட்சின் புதிய ஹோட்டலில் 570 சொகுசு அறைகள், ஒரு சூதாட்டக் கூடம், 15,000 பேர் அமரக்கூடிய பொழுதுபோக்கு அரங்கம் ஆகியவற்றுடன் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்த 200,000 சதுர அடியில் இடமும் ஒதுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வரும் 2030ஆம் தேதி கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த ஹோட்டல் 2031ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மரினா பே சேண்ட்சைப் போலவே புதிய ஹோட்டலிலும் பொது, தனியார் வசதிகள் அமைந்திருக்கும்.
மரினா பே சிங்கப்பூர்க் கதையின் அடையாளம் என்று பிரதமர் வோங் வருணித்தார்.
மரினா பேயில் தேசிய தின அணிவகுப்பு, ஆண்டிறுதி நிகழ்ச்சி போன்ற முக்கிய கொண்டாட்டங்களுக்குச் சிங்கப்பூரர்கள் திரள்கின்றனர் என்ற பிரதமர் வோங், உலகமெங்கும் மரினா பே சேண்ட்ஸ் பிரபலம் என்றார்.
“மரினா பேயை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். ஆனால் அதோடு நமது மேம்பாடுகள் முடியவில்லை. இன்னும் சிறந்த வாய்ப்புகள் எதிர்காலத்தில் உள்ளன என்பதை நம்புகிறோம்,” என்றார் அவர்.
லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் போன்ற உறுதியான பங்காளித்துவங்கள் மூலம் சிங்கப்பூர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு முன்னேறுகிறது என்று பிரதமர் வோங் சுட்டினார். 2005ல் அறிவிக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த உல்லாசத் தளத் திட்டம் ஒரு துணிச்சலான முடிவு என்றார் பிரதமர்.