ஒருங்கிணைந்த பொழுதுபோக்குத் தளமான மரினா பே சாண்ட்ஸ் (எம்பிஎஸ்) அதன் இரண்டாம் காலாண்டின் வருவாயில் மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சொத்து வருவாய், கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் பதிவான நிலையை மிஞ்சி இருப்பதாக மரினா பே சாண்ட்ஸ்சின் முதன்மை நிறுவனமான லாஸ் வேகாஸ் சாண்ட்ஸ் புதன்கிழமை தெரிவித்தது.
இரண்டாம் காலாண்டுக்கான நிகரச் சொத்து வருவாய் US$432 மில்லியனாக (S$572.5 மில்லியன்) இருந்தது. அது 2019ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் பதிவான US$346 மில்லியனைக் காட்டிலும் 24 விழுக்காடு அதிகம் என மரினா பே சாண்ட்ஸ் தனது பதிவில் தெரிவித்தது.
இரண்டாம் காலாண்டுக்கான நிகர வருவாய் 36.2 விழுக்காடு அதிகரித்து US$925 மில்லியன் எனப் பதிவானது.சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் அது US$679 மில்லியனாக இருந்தது.
சூதாட்டத்தளங்களில் இருந்துவரும் வருவாய் முக்கிய காரணமாக உள்ளது. அந்த வருவாய் 29.8 விழுக்காடு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் உயர்ந்து, இந்த ஆண்டு US$649 மில்லியனாக (S$860 மில்லியன்) உள்ளது.
“இந்தக் காலாண்டில் மக்காவிலும்,சிங்கப்பூரிலும் பயணம், சுற்றுலாத்துறை போன்றவற்றில் வலுவான மீட்சி ஏற்பட்டுள்ளதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்,” என லாஸ் வேகாஸ் சாண்ட்சின் தலைமை நிர்வாக அதிகாரியான ராபர்ட் ஜி. கோல்ட்ஸ்டைன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

