பளிச்சென்று சிவப்பு, வெள்ளை நிறங்களில் மரினா பே புரோமோண்டரி ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினக் கொண்டாட்ட உணர்வில் திளைத்திருந்தது.
பாடாங்கிலிருந்து மரினா பே வரை நீடித்த இவ்வாண்டின் என்டியுசி தேசிய தினக் கொண்டாட்டங்களில் கிட்டத்தட்ட 7,000 பேர் திரண்டு சிங்கப்பூரின் 60 ஆண்டுப் பயணத்தை இன்புறக் கொண்டாடினர்.
மாலை 4 மணியளவு என்டியுசி மரினா பே கொண்டாட்டங்களுக்கு மக்கள் அலை அலையாய் வரத் தொடங்கினர்.
பிரபல உள்ளூர் தமிழ் இசைக் கலைஞர் ஷபிர் சுல்தான் உட்பட தேசிய தின அணிவகுப்பு நேரடி ஒளிபரப்புக்கு முன் இன்னும் சில உள்ளூர் இசைக் கலைஞர்கள் மேடையேறி தேசிய தினப் பாடல்களை அரங்கேற்றினார்கள்.
தேசிய தினக் கொண்டாட்டங்களைத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புவழி மட்டும் பல ஆண்டுகள் பார்த்து வருகிறார் நிர்மலா. இம்முறை தம் தாயார் தேசிய தினக் கொண்டாட்ட உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று அவரை மரினா பே பகுதிக்கு அழைத்து வந்தார் அவருடைய மகள் கீர்த்தனா.
“இவ்வாண்டின் சிறப்புக் கொண்டாட்டத்துக்கு மத்தியில் நாங்கள் இங்கே இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று பகிர்ந்தனர் அம்மா, மகள் இருவரும்.
மரினா பேயில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டங்களை முதல்முறையாக ரசித்தனர் சகோதரிகள் லேக்கா, வேணி.
60 ஆண்டு சுதந்திரம் ஒரு பெரிய கொண்டாட்டத்திற்குத் தகுதியானது என்றார் லேக்கா.
தொடர்புடைய செய்திகள்
“அணிவகுப்பு வழியாக சிங்கப்பூர் வரலாற்றைக் காண்பது எனக்கு மிகவும் பிடித்த அங்கங்களில் ஒன்றாகும்,” என்று தமிழ் முரசுடன் அவர் பகிர்ந்தார்.
‘மாஜுலா எஸ்ஜி யூத்’ என்பது இந்த ஆண்டின் என்டியுசி தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டத்தின் கருப்பொருள்.
‘ட்ரீம் எக்ஸ்சேஞ்ச்’ அம்சத்தில் பொதுமக்கள் ஒரு சிங்கப்பூரர் இதர சிங்கப்பூரருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சொல்லும் செய்தியைத் தொலைபேசியில் கேட்டனர்.
‘சிங்கப்பூர் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பி முன்னேறுதல்’ என்ற அங்கத்தில் ஏறத்தாழ 25 இளையர்கள் தேசிய தினப் பாடல்களுக்கு ‘ஃபிளாஷ்மோப்’ (flashmob) நடனத்தை நிகழ்த்தினர்.
மீண்டும் இரண்டாவது முறை என்டியுசி தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் 21 வயது ஷர்மிளாவும் அவருடைய 24 வயது துணைவர் ரிஷியும் இங்குள்ள கொண்டாட்டங்கள் இன்னும் இளமைத் துள்ளலுடன் உள்ளன என்று தெரிவித்தனர்.
“இங்கிருந்து ‘ரெட் லயன்ஸ்’ வான்குடை வீரர்கள் வானில் மிதக்கும் காட்சிகள், சிங்கப்பூர் கடற்படை முக்குளிப்பாளர்கள் நீருக்குள் செல்லும் காட்சிகள் தெள்ளத் தெளிவாக இருந்தன,” என்றார் ரிஷி.
“வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூராக அடுத்த 60 ஆண்டுகள் இருக்க விரும்புகிறேன்,” என்று எதிர்கால சிங்கப்பூர் பற்றிய தமது ஆசைகளை தெரிவித்தார் ஷர்மிளா.
கூடுதலான இளையர்களை ஈடுபடுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கொண்டாட்டமானது மூன்று நாள்களில் இரண்டு நாள்கள் முன்னோட்டக் கொண்டாட்டமாகவும் இறுதி நாள் தேசிய தினக் கொண்டாட்டமாகவும் நடைபெற்றது.
கொண்டாட்டங்களின் இறுதியில் வாணவேடிக்கைகள் வானைப் பிளந்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்தன.
இந்த மூன்று நாள்களில் கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்துகொண்டதாக என்டியுசி தெரிவித்தது.