மெரினா சென்டர், கரையோரப் பூந்தோட்டங்களை இணைக்கும் வளைவான பாலம்

2 mins read
a6d3f7e2-b6fd-4d09-9a5b-3bc579074533
பெஞ்சமின் ஷியர்ஸ் பாலத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் புதிய பாலம் அமைந்திருக்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெரினா சென்டரையும் கரையோரப் பூந்தோட்டங்களையும் இணைக்கும் வளைவான பாதை அடுத்த நான்கு ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதசாரிகள், சைக்கிளோட்டிகளுக்கான இந்தப் பாலம், பல பூங்காக்களுக்கான பாதைகளுடன் இணைக்கப்படும். தீவைச் சுற்றியுள்ள பூங்கா இணைப்புப் பாதை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, கரையோரப் பூந்தோட்டங்களின் பே ஈஸ்ட் கார்டன், தஞ்சோங் ரூ ஆகிய பூங்காக்களுக்கு புதிய பாலம் வழியாகச் செல்ல முடியும். இம்மாதம் 9ஆம் தேதி நகர மறுசீரமைப்பு ஆணையம் அதற்கான ஒப்பந்தக் குத்தகையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாலத்தை ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, பே ஈஸ்ட் கார்டன், தஞ்சோங் ரூ ஆகியவற்றுடன் இணைக்கும் சாய்வுப் பாதைகள் அமைக்கப்படும். தஞ்சோங் ரூவுடன் இணைக்கப்படும் சாய்வுப் பாதையில் ஒரு மண்டபம், பொது கழிவறை கட்டப்படும். பாலத்தின் மற்றொரு முனை, பாதசாரிகளையும் சைக்கிளோட்டிகளையும் எதிர்காலத்தில் கட்டப்படும் பே சென்ட்ரல் கார்டன், பூங்கா இணைப்புப் பாதையுடன் இணைக்கும். இது, ஃபார்முலா ஒன் நடைபெறும் கார்ப் பந்தயப் பாதைக்கு அருகே அமைந்திருக்கும். பே சென்ட்ரல் பூங்காவை உருவாக்கும் உடனடியான திட்டம் எதுவும் இல்லை என்று கடந்த 2022ஆம் ஆண்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், சிங்கப்பூர் ராட்டினத்திலிருந்து கம்போங் பூகிஸில் உள்ள கிராஃபோர்ட் பாலம் வரையில் மூன்று கிலோ மீட்டர் நீள நீர்முகப்பு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று வரை 75 கிலோ மீட்டர் நீளமுள்ள பூங்கா இணைப்புக் கட்டமைப்பு, சிங்கப்பூரின் ஆக நீளமான பொழுதுபோக்கு இணைப்பாகும். வடக்கு-கிழக்கிலிருந்து சாங்கி பீச் பூங்கா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா வரை நீண்டு சிங்கப்பூர் ஆற்றைக் கடந்து தெற்கில் உள்ள பெர்லாயர் கிரீக் வரை செல்கிறது.

குறிப்புச் சொற்கள்