மரினா சவுத் முனைய சூரிய மின்சக்தித் திட்டம் நிறைவடைந்தது

மரினா சவுத் முனைய சூரிய மின்சக்தித் திட்டம் நிறைவடைந்தது

2 mins read
a59a6d59-7e15-44fc-901e-2f324cba4f58
மரினா சவுத் பியர் படகு முனையத்தை நோக்கிச் செல்லும் நடைபாதைக் கூரையில் பொறுத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தித் தகடுகள். - படம்: எஸ்பிஹெச் ஊடகம்
multi-img1 of 2
மரினா சவுத் பியர் படகு முனையத்தில் உள்ள சூரியத் தகடுகள், மணிக்கு 780,000 கிலோவாட் மின்உற்பத்தி செய்யக்கூடியவை.
மரினா சவுத் பியர் படகு முனையத்தில் உள்ள சூரியத் தகடுகள், மணிக்கு 780,000 கிலோவாட் மின்உற்பத்தி செய்யக்கூடியவை. - படம்: சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம்

மரினா சவுத் பியர் பகுதியில் தொடங்கப்பட்ட சூரிய மின்சக்தித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

அதன் விவரங்களை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) வியாழக்கிழமை (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அங்குள்ள படகு முனையத்தின் எதிர்கால மின்சக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்வதோடு தற்போது இயங்கும் மின்படகுகளுக்கும் அது மின்னூட்டு வசதிகளை வழங்கும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஏறத்தாழ 180 நான்கு அறை வீடுகளின் ஓராண்டுக்கான மின்சாரத்தை வழங்கும் அளவுக்கு அங்கு உற்பத்தியாகும் மின் ஆற்றல் இருக்கும் என்று ஆணையம் விளக்கியது. அது ஒரு மணி நேரத்துக்கு 780,000 கிலோவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆணையத்தின் கடற்கரையைச் சார்ந்த செயல்பாடுகளால் ஏற்படும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை (கிரீன்ஹவுஸ் கேஸ்) சூரிய மின்சக்தித் திட்டம் குறைக்கும்.

அரசாங்கம் நடத்திவரும் பொதுத்துறையின் நீடித்தநிலைத்தன்மைக்கான இயக்குத்திற்கு அது ஆதரவு நல்கும் என்று ஆணையம் அதன் அறிக்கையில் தெரிவித்தது.

மரினா சவுத் பியர் படகு முனையத்தின் கூரையும் நடைபாதைகளின் மேற்பாகங்களும் இணைந்து 3,200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டவை. அவற்றில் சூரியசக்தியை ஈர்க்கும் 1,092 மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

முழுமையடைந்துள்ள இந்தத் திட்டம் மரினா சவுத் பியரின் 20 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், அமைப்பின் நீடித்த நிலைத்தன்மைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.

அதன் கரைசார்ந்த வசதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை விரிவாக்கும் ஆணையத்தின் திட்டப்படி புலாவ் சாத்துமு தீவில் தற்போது டீசலி இயங்கும் நடைமுறையை சூரியமின்சக்திக்கு மாற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தீவு முழுமையாக சூரிய சக்தியில் இயங்கும் மின்சார முறைக்கு 2027ஆம் ஆண்டிறுதிக்குள் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்