சிங்கப்பூரின் புகழ்பெற்ற கடைத்தொகுதிகளில் ஒன்றான மரினா ஸ்குவேர், 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் புதிய மறுமேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக சொகுசு வீடுகள், புதிய ஹோட்டல், சேவை அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள் முதலியவை சேர்க்கப்படவுள்ளன.
மறுசீரமைப்புப் பணிகள் 2031ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சிங்கப்பூர் லேண்ட் குழுமம் (சிங்லேண்ட்) செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) தெரிவித்தது. வளாகத்தில் தற்போதுள்ள மூன்று ஹோட்டல்களும் கட்டுமானப் பணிகளின்போது தொடர்ந்து இயங்கும்.
தற்போதுள்ள மூன்று ஹோட்டல்களான பேன் பசிபிக் சிங்கப்பூர், பார்க்ராயல் கலெக்ஷன் மரினா பே, மாண்டரின் ஓரியன்டல் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் மூன்று புதிய கோபுரங்கள் இணைக்கப்படும். அதேவேளையில் நான்கு தளங்களைக் கொண்ட மரினா ஸ்குவேர் கடைத்தொகுதி சீரமைக்கப்படும்.
புதிய வளாகம் ஏறக்குறைய 9.2 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதில் குடியிருப்புகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள், விளையாட்டுக் கூடங்கள், உடற்பயிற்சி நிலையங்களுடன் கலை, கலாசார இடங்களும் இருக்கும்.


