தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் மசெக போட்டியின்றித் தேர்வு

1 mins read
2011ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப்பின் முதன்முறையாக ஒரு தொகுதியில் போட்டியில்லை
92895358-9a20-479f-9662-d1b271078f87
மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் ஆளும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணியை எதிர்த்துப் பாட்டாளிக் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தல் 2025ல் வேட்புமனுத் தாக்கல் நாளான புதன்கிழமையே (ஏப்ரல் 23) ஒரு குழுத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக).

ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் மசெக அணியை எதிர்த்து யாரும் போட்டியிடாதது அதற்குக் காரணம்.

அந்தக் குழுத்தொகுதியில் முக்கிய எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி மசெக வேட்பாளர்களை எதிர்த்துத் தனது வேட்பாளர்களைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த பொதுத் தேர்தலில் (2020) மரின் பரேட் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி மக்கள் செயல் கட்சியுடன் பொருதியது.

அப்போது மசெக 57.74 விழுக்காட்டு வாக்குகளுடன் அங்கு வெற்றி பெற்றது. பாட்டாளிக் கட்சி 42.26 விழுக்காட்டு வாக்குகளுடன் தோல்வியுற்றது.

மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியில்லாததால் அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்த மசெக அணியினரான உள்துறை, தேசிய வளர்ச்சித் துணையமைச்சர் ஃபைஷால் இப்ராகிம், முன்னைய நாடாளுமன்ற நாயகர் சியா கியான் பெங், மெக்பர்சன் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங், புதுமுக வேட்பாளர்கள் டயான பாங், கோ பெய் மிங் ஐவரும் சிங்கப்பூரின் 15வது நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் 2011ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப்பின் முதன்முறையாக ஒரு தொகுதியில் போட்டியில்லாத சூழல் இதுவேயாகும். 

குறிப்புச் சொற்கள்