கடல் ஆய்வு மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்க்கும்: டெஸ்மண்ட் லீ

கடல் ஆய்வு மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்க்கும்: டெஸ்மண்ட் லீ

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Oct 2026 - 9:12 pm

2 mins read
ஓஷன் எக்ஸ் ஆய்வுக் கப்பல் தற்போது சிங்கப்பூரில் உள்ளதைக் காட்டும் படம்.
ஓஷன் எக்ஸ் ஆய்வுக் கப்பல் தற்போது சிங்கப்பூரில் உள்ளதைக் காட்டும் படம். - படம்: ஓஷன் எக்ஸ் இணையப் பக்கம்

குழுவாகச் செயல்படுதல், சிந்தனை ஆற்றல், ஒருங்கிணையும் தன்மை உட்பட பல்வேறு திறன்களை கடல் ஆராய்ச்சி மாணவர்களிடையே வளர்க்கும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) தெரிவித்தார்.

‘கெப்பல் பே’ படகுத்துறை வளாகத்தில் உள்ள ‘ஓஷன் எக்ஸ்புளோரர்’ ஆய்வுக் கப்பலில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெற்ற ‘ஓஷன் எக்ஸ்’ உச்சநிலை மாநாட்டின் இறுதி நாளில் திரு லீ சிறப்புரையாற்றினார்.

கடலில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள், சிங்கப்பூர் மாணவர்கள் வளர்ச்சியடைய பல வகைகளிலும் உதவும் என்றார் திரு லீ. அது பற்பல துறைகளையும் தர நிலைகளையும் கலாசார வேறுபாடுகளையும், தேசங்களையும் தலைமுறைகளையும் கடந்து பரந்த புரிந்துணர்வை ஏற்படுத்த வல்லது என்று அவர் விளக்கினார்.

தகவல் பரிமாற்றம் எளிதாகக் கிடைக்கும் நிலையில், தொழில்நுட்பம் அதிவிரைவாக மேம்படும் உலகச் சூழலில், இத்தகு ஆய்வுக் கல்விப் பயிற்சிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தனிப்பட்ட கூறுகளாக பயன்பெறுவதைவிட ஒட்டுமொத்த பயன் பெற மாணவர்கள் விழைய வேண்டும். ஒருங்கிணைந்து செயலாற்றி தற்காலத்தில் எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிய அவர்கள் கற்றுக்கொள்வது அவசியம்.

எனவே பலதரப்பட்ட திறன்களைக் கொண்ட மக்களுடன் இணைந்து செயலாற்றி அனுபவங்களைப் பகிரும் தன்மையை வளர்த்துக்கொள்வதோடு குழுவாக இயங்கும் தனிப்பட்ட ஆற்றலை சிங்கப்பூர் மாணவர்கள் அடைய வேண்டும் என்று அமைச்சர் லீ மேலும் கூறினார்.

பூமியின் மேற்பரப்பை 70 விழுக்காடு கடலே சூழ்ந்துள்ளது. உலகின் பல உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்கி, வணிகத்தின் அடிப்படையாக அமைந்து பருவநிலையைச் சீராக்கும் பங்கையும் கடலே ஆற்றுகிறது.

இருப்பினும் அது முழுமையாக இன்னும் ஆராயப்படவில்லை. அறிவியலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கடலில் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஓஷன் எகஸ் போன்ற ஆய்வுத் திட்டங்கள் நமது கடல்களை புரிந்துகொள்ளவும் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் உதவுகின்றன என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கடல்கடல்துறைகல்வி அமைச்சுடெஸ்மண்ட் லீஅமைச்சர்மாநாடுமாணவர்கல்விபள்ளிக் கல்விகுழு