சிங்கப்பூர் போன்ற கடல்துறை நடுவங்கள் உலகளாவிய இடையூறுகளை எதிர்கொள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் வலியுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில் வர்த்தகம் தொடர்வதை உறுதிசெய்வதில் அவற்றின் முக்கியத்துவத்தை அவர் சுட்டினார்.
சன்டெக் சிங்கப்பூர் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் சிங்கப்பூர்க் கடல்துறை வார நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்துப் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.
துணைப் பிரதமர் கான் தமது சிங்கப்பூர்க் கடல்துறை விரிவுரையில், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உலகப் பொருளியலில் ஏற்படுத்தியுள்ள அதிர்வால் எரிசக்தி விலை, போக்குவரத்துச் செலவுகள் மற்றும் உற்பத்திச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே, இத்தகைய சவாலான சூழலில் சிங்கப்பூர் போன்ற கடல்துறை நடுவங்கள் முக்கியத்துவம் பெறுவதாக அவர் விளக்கினார்.
நிலைத்தன்மை
உலகளாவிய வர்த்தகத்தில் நிலையற்றதன்மை நிலவும்போது, வர்த்தகப் பாதைகளை விரைவாகவும் திறமையாகவும் மாற்றியமைக்கக்கூடிய கடல்துறை நடுவங்கள் நிலைத்தன்மையை வழங்குகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி இத்தகைய நடுவங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகத் திரு கான் கூறினார்.
இணைப்பும் மீள்திறனும்
சிங்கப்பூர் உலகின் ஆகப் பரபரப்பான சரக்குப் பரிமாற்ற முனையமாக இருப்பதுடன் உலகெங்கிலும் உள்ள 600க்கும் மேற்பட்ட துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வலுவான இணைப்பு, சிங்கப்பூர் தன்னைத் தற்காத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கும் ஒரு முக்கிய ஆதரவாகத் திகழ உதவுகிறது என்றார் துணைப் பிரதமர்.
2040ஆம் ஆண்டு துவாஸ் துறைமுகம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, சிங்கப்பூரின் துறைமுக நடவடிக்கைகள் மேலும் வலுவடையும் என்றும் உலகளாவிய மீள்திறனுக்கு அது உதவும் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக விதிமுறைகள்
கடல்துறை வர்த்தகத்தில் நிலையான விதிமுறைகளை, குறிப்பாக ஐக்கிய நாட்டு நிறுவனக் கடல்துறைச் சட்ட ஒப்பந்தத்தைச் (UNCLOS) சிங்கப்பூர் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று துணைப் பிரதமர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தைப் பொறுத்தவரை, மின்னிலக்கமயமாக்கல், கரிம வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகிய அம்சங்களில் கடல்துறை நடுவங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்பாராச் சூழல்களை எதிர்கொண்டு, உலகத் தொடர்பைத் தொடர்ந்து பராமரிக்கக் கூட்டு முயற்சியும் உறுதியும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

