தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் 2024ல் திருமணங்கள், குழந்தைப் பிறப்புகள் குறைந்தன

3 mins read
21a266fc-b7d9-46cc-9715-15c6a612552d
2022ல் 29,389 ஆகவும் 2023ல் 28,310 ஆகவும் இருந்த திருமணங்களின் எண்ணிக்கை, 2024ல் 26,328ஆகக் குறைந்தது. - படம்: சாவ் பாவ்

2024ல் குறைவான தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர். இது, 2022ல் பதிவுசெய்யப்பட்ட ஆக அதிக திருமணங்களின் எண்ணிக்கையிலிருந்து 10 விழுக்காட்டிற்குமேல் குறைவு.

கொவிட்-19 விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு, 2022ல் 29,389 ஆகவும் 2023ல் 28,310 ஆகவும் இருந்த திருமணங்களின் எண்ணிக்கை, 2024ல் 26,328ஆகக் குறைந்தது. 1961ல் திருமணம் குறித்த தரவுகள் முதன்முதலில் வெளியிடப்பட்டதிலிருந்து 2022ஆம் ஆண்டு எண்ணிக்கையே ஆக அதிகமாகும்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு திங்கட்கிழமை (ஜூலை 7) அதன் ‘குடும்பப் போக்குகள் அறிக்கை 2025’ல் இந்த அண்மைய விவரங்கள் வெளியிடப்பட்டன. அந்த 37 பக்க அறிக்கை திருமணம், பெற்றோர் பருவம், குழந்தைப்பருவம், முதுமை போன்ற குடும்ப வாழ்க்கை நிலைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை அளிக்கிறது.

2024ல் அனைத்து வயதினரிலும் சிவில் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், 25 முதல் 34 வயதுடைய மணமக்கள் சம்பந்தப்பட்ட திருமணங்களில் இந்தச் சரிவு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

25 முதல் 29 வயதுடைய மணப்பெண்கள் சம்பந்தப்பட்ட சிவில் திருமணங்களின் எண்ணிக்கை 2024ல் 988வும் 30 முதல் 34 வயதுடையவர்களுக்கு 506வும் குறைந்தது.

அதேபோல், 25 முதல் 29 வயதுடைய மணமகன்கள் சம்பந்தப்பட்ட சிவில் திருமணங்களின் எண்ணிக்கை 2024ல் 758வும் 30 முதல் 34 வயதுடையவர்களுக்கு 583வும் குறைந்தது.

“திருமணங்களைச் சுற்றியுள்ள முடிவுகள் முற்றிலும் தனிப்பட்டவை. ஆனால், ஒரு குடும்பத்தைத் தொடங்க அவர்கள் தேர்வுசெய்தால், தம்பதிகளுக்கு நாங்கள் மேலும் உறுதியளிக்க முடியும்,” என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி திங்கட்கிழமை (ஜூலை 7) ஒன் ஃபாரர் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய குடும்ப விழா பாராட்டு நிகழ்வில் தனது உரையில் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பல ஆண்டுகளாக திருமணத்துக்கும் பெற்றோருக்கும் ஆதரவை மேம்படுத்தியுள்ளது என்றார் அவர்.

“ஒரு சமூகமாக, நம்மைச் சுற்றியுள்ள இளம் தம்பதிகளுக்கு நமது சொந்த பயணங்களையும் பாடங்களையும் பகிர்வதன் மூலம் ஆதரவளிக்கலாம்,” என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் ஜூலை 7 தரவுகளின்படி, 2024ல் மொத்தம் 7,382 திருமணங்கள் மணமுறிவில் முடிந்தன அல்லது ரத்துசெய்யப்பட்டன. இது, 2023ல் 7,118ஆக இருந்ததைவிட 3.7 விழுக்காடு அதிகமாகும்.

அண்மைய ஆண்டுகளில் திருமணங்கள் மேலும் நிலையானதாக உள்ளன. 2020க்கும் 2024க்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் திருமண முறிவுகளின் சராசரி எண்ணிக்கை 7,291 ஆக இருந்தது. இது, 2015க்கும் 2019க்கும் இடையில் ஆண்டு சராசரியான 7,536ஐவிடக் குறைவு.

2024ல் மக்கள் திருமணம் செய்துகொண்ட இடைநிலை வயது 2023ஐ ஒத்ததாகவே இருந்தது. சிங்கப்பூரில் மணமகன்கள் 31.1 என்ற இடைநிலை வயதில் திருமணம் செய்துகொண்டனர். அதே நேரத்தில் மணப்பெண்கள் 2024ல் 29.6 என்ற இடைநிலை வயதில் திருமணம் செய்துகொண்டனர்.

சிங்கப்பூர்வாசிகளிடையே மொத்த கருவுறுதல் விகிதம் 2024ல் முந்தைய ஆண்டைப் போலவே 0.97ஆக இருந்தது. 0.97 என்ற விகிதம் 2023ல் வரலாற்று ரீதியாகக் குறைவாக இருந்தது. இது, 2022ல் 1.04 ஆகவும் 2021ல் 1.12 ஆகவும் இருந்தது.

2014ல், 40 முதல் 49 வயதுடைய திருமணமான பெண்களில் ஏறக்குறைய 11 விழுக்காட்டினருக்குக் குழந்தைகள் இல்லை. இது, 2024ல் 15 விழுக்காடாக உயர்ந்தது.

ஒரு குழந்தை கொண்ட அத்தகைய பெண்களின் விகிதம், 2014ல் 21.6 விழுக்காட்டிலிருந்து 2024ல் 25.1 விழுக்காடாக அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்