திருமணம், பிள்ளை வளர்ப்பு, வாழ்க்கையின் பிற முக்கிய மாற்றங்களின்போது சிங்கப்பூர்த் தம்பதியர் மற்றும் குடும்பங்களின் தேவைகளும் சூழ்நிலைகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதை அறிந்துகொள்ள, 10,000க்கும் மேற்பட்ட தம்பதியரையும் குடும்பங்களையும் உள்ளடக்கிய புதிய பத்தாண்டு ஆய்வு ஒன்று நடத்தப்படவுள்ளது.
தமது அமைச்சு இந்த நீண்டகால ஆய்வை 2028ஆம் ஆண்டில் தொடங்கும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங் புதன்கிழமையன்று (நவம்பர் 18) அறிவித்தார்.
ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இரண்டு நாள் ‘ஆசியக் குடும்ப மாநாடு 2026’ன் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். இந்த ஆய்வின் முடிவுகள் வட்டார அளவில் குடும்பங்கள் குறித்து வளர்ந்துவரும் ஆராய்ச்சிகளுக்குப் பெரும் பங்களிப்பாக அமையும் என்று திரு கோ தெரிவித்தார்.
‘சிங்கப்பூர்க் குடும்பங்களின் காலப்போக்கிலான மீள்திறனும் விளைவுகளும்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை அவை எவ்வாறு கையாள்கின்றன, திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவை தொடர்பான அவற்றின் முடிவுகள் காலப்போக்கில் எவ்வாறு மாறுகின்றன ஆகியவற்றை ஆராயும்.
“குடும்பங்களின் மாறிவரும் தேவைகளை முன்கூட்டியே கணிக்கவும் குடும்ப மீள்திறன் எவ்வாறு பரிணமிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் மிக அவசியமான நேரத்தில் உரிய ஆதரவை வழங்கவும் இந்த நுண்ணறிவுகள் எங்களுக்கு உதவும்,” என்று திரு கோ கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள திருமணமான தம்பதியரின் பிரதிநிதித்துவ மாதிரியைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் 2028ஆம் ஆண்டில் புதிதாகத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியரும் பிள்ளைகள் இருக்கும் அல்லது பிள்ளைகள் இல்லாத இரண்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை திருமண வாழ்க்கையில் உள்ள தம்பதியரும் இடம்பெறுவர்.
வாழ்க்கையின் முக்கிய மாற்றங்கள், சவால்கள் ஆகியவற்றின்போது குடும்பங்களுக்குச் சிறந்த முறையில் ஆதரவளிக்கும் கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்குவதற்கு இந்த ஆய்வின் முடிவுகள் வழிகாட்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
வட்டார அளவில் குடும்ப அமைப்புகளும் மக்கள்தொகைப் போக்குகளும் மாறிவரும் சூழலில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
மாநாட்டில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 17) வெளியிடப்பட்ட முதலாவது ‘ஆசியான் குடும்பங்களின் நிலை அறிக்கை 2026’, பெரும்பாலான உறுப்பு நாடுகளில் மக்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்வதையும் குறைவான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதையும் சிறிய குடும்பங்களாக வாழ்வதையும் கண்டறிந்துள்ளது.
பத்து ஆசியான் நாடுகளின் தேசியப் புள்ளிவிவரங்கள் மற்றும் கிட்டத்தட்ட 13,000 நகர்ப்புறக் குடும்பங்களிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
வட்டார முழுவதும் குடும்பங்கள் மாற்றமடைந்து வந்தாலும் அவற்றின் முக்கியத்துவம் குறையவில்லை என்று திரு கோ குறிப்பிட்டார்.
அன்பு, சொந்தம் என்ற உணர்வு, பாதுகாப்பு, பிணைப்பு ஆகியவற்றிற்கான தேவை தொடர்ந்து நீடிப்பதாக அவர் கூறினார்.
