மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர் மார்ஷல் லிம்முக்கு, எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு சவாலாக இருந்தது.
அந்தச் சவாலை ஏற்கத் தயாராக இருப்பதாக கட்சித் தலைமையிடம் அவர் கூறியது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
38 வயதான திரு லிம், சிங்கப்பூரின் தேர்தல் வரலாற்றில் மிக நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தொகுதியாகக் கருதப்படும் பாட்டாளிக் கட்சியின் கோட்டையான ஹவ்காங் தனித் தொகுதியில் போட்டியிடுகிறார்.
1991ஆம் ஆண்டு தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதிலிருந்து அது பாட்டாளிக் கட்சியின் வசம் உள்ளது.
அந்தத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான 54 வயது திரு டெனிஸ் டான், 2020 தேர்தலில் 61.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.
அது 2015ஆம் ஆண்டு 57.7% வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் திரு பிங் எங் ஹுவாட்டைவிட அதிகம்.
ஹவ்காங் அவென்யூ 3ல் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில், காலை 7.30 முதல் காலை 9 மணி வரை தொகுதி உலாவின்போது திரு லிம் குடியிருப்பாளர்களைச் சந்தித்தார்.
பின்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய திரு லிம், “சேவை என்று வந்துவிட்டால் நான் பாகுபாடு காட்டுவது இல்லை என்பதால், எதற்கும் தயாராக இருப்பதாக (கட்சி) தலைமையிடம் மிகத் தெளிவாகக் கூறினேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மசெகவில் சேருவதற்கு முன்பு, திரு லிம் பொது மற்றும் தனியார் துறை இரண்டிலும் அனுபவமுள்ள ஒரு குற்றவியல் வழக்கறிஞராக இருந்தார்.
இவ்வாண்டு பிப்ரவரியில் அவர் மசெகவின் ஹவ்காங் கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அக்கிளையின் முன்னாள் தலைவராக இருந்த திரு ஜேக்சன் லாம் தற்போது நீ சூன் குழுத்தொகுதியில் மசெக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
திரு டெனிஸ் டானுக்கு எதிரான அவரது வாய்ப்புகள் குறித்து கேட்டபோது, “பதவியில் இருப்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்தவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார். என்னைப் போன்ற புதிய வேட்பாளர்களுக்கான மதிப்பீடு எனது நேர்மையின் அடிப்படையில் இருக்கும்,” என்று திரு லிம் பதிலளித்தார்.