சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதியில் களமிறக்கவுள்ள அணியை (ஏப்ரல் 13) அறிவித்துள்ளது.
கட்சியின் ஏற்பாட்டுச் செயலாளர் ஜுஃப்ரி சலிம், ‘வேக் அப் சிங்கப்பூர்’ (Wake Up Singapore) தளத்தைத் தோற்றுவித்த அரிஃபின் ஷா, நாடக இயக்குநர் அலெக் டொக், டாக்டர் ஜிஜின் வோங் ஆகியோர் அடங்கிய குழு மார்சிலிங்- இயூ டீயில் போட்டியிடுகிறது.
மார்சிலிங் லேன் சந்தை, உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலாவை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் சீ சூன் ஜுவான் வேட்பாளர்களை அறிவித்தார்.
2015, 2020ஆம் ஆண்டுகளில் மார்சிலிங்- இயூடீ குழுத்தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கு அந்த வட்டாரம் நன்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருப்பதை டாக்டர் சீ சுட்டினார்.
கடந்த முறை 31.27 விழுக்காடு, 36.82 விழுக்காடு ஆகிய வாக்குகளைப் பெற்று அக்கட்சி மக்கள் செயல் கட்சியிடம் தோற்றது.
இந்த முறை பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமை தாங்கும் மக்கள் செயல் கட்சி அணியுடன் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.