பிரதமர் லாரன்ஸ் வோங் வழிநடத்தும் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி வாக்கு விகிதாச்சாரத்தில் 73.46 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. மசெகவிற்கு எதிராகப் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 26.54 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
மக்கள் கொடுத்துள்ள மிகப்பெரும் ஆதரவை நல்கிய மக்களுக்கு உளமார்ந்த நன்றிக் கடன் பட்டுள்ளதாகப் பிரதமர் வோங், மேடையைச் சூழந்த ஆதரவாளர்களுக்கு இயோ சூ காங் விளையாட்டரங்கில் நன்றி தெரிவித்தார்.
பிரதமராகவும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளராகவும் போட்டியிட்டு வென்றுள்ளது மனதை நெகிழ வைக்கும் அனுபவமாக இருப்பதாகத் திரு வோங் கூறினார்.
நீங்கள் அளித்துள்ள இந்தப் பலமான ஆதரவை மதிப்போம். உங்களுக்காக நாங்கள் மேலும் கடுமையாக உழைப்போம். கட்சித் தொண்டர்களுக்கும் மார்சிலிங்-இயூ டீ தொண்டூழியர்களுக்கும் தங்கள் கடப்பாட்டுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நாம் அனைவரும் கடுமையாக உழைத்து மார்சிலிங் இயூ டீயிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம் என்று திரு வோங் கூறினார்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே மக்கள் செயல் கட்சியின் அணி இந்தத் தேர்தலிலும் களமிறங்கியது.
பிரதமர் வோங்குடன், மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம், திருவாட்டி ஹெனி சோ ஆகியோர் தொடர்ந்து பிரதமருடன் மார்சிலிங் - இயூ டீ மசெக வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.
இந்த அணிக்கு எதிராக நின்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் ஜுஃப்ரி சலிம், ‘வேக் அப் சிங்கப்பூர்’ (Wake Up Singapore) தளத்தைத் தோற்றுவித்த அரிஃபின் ஷா, நாடக இயக்குநர் அலெக் டொக், டாக்டர் ஜிஜின் வோங் ஆகியோர் போட்டியிட்டனர்.
பத்தாண்டுகளாக மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் தொடர்ந்து சேவையாற்றிவரும் திரு வோங்கிற்கு பிரதமராக அங்குப் போட்டியிட்டது இதுவே முதல் முறை.

