திருநாள் கொண்டாட்ட காலத்தில் ஓடோடி வந்து ஆதரித்து மகிழ்வித்த நல்லுள்ளங்கள்

2 mins read
b056ed97-0a2d-4e52-b974-fff07271cefd
திரு தென்னரசுடன் மார்சிலிலிங் மக்கள் செயல் கட்சிக் குழுவினர். - படம்: மார்சிலிங் மசெக கிளை

தீபாவளித் திருநாளன்று மற்றவர்களுடன் அன்பைப் பகிர்வதோடு, தேவைப்படுவோருக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது நன்று.

அதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது மக்கள் செயல் கட்சியின் மார்சிலிங் கிளையைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்ட ஒரு புதிய முயற்சி. 

கருணையை மையமாகக் கொண்ட அம்முயற்சியின் நோக்கம், தேவைப்படும் குடும்பங்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் ஒளியையும் நம்பிக்கையையும் பரப்புவதாகும்.

தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, தனிப்பட்ட முறையில் இல்லத்தரசி திருவாட்டி உமா ராமகிருஷ்ணன், 47, பணிஓய்வு பெற்ற திரு தென்னரசு பொன்னுசாமி, 60, ஆகியோரைச் சந்தித்து, பண்டிகை அன்பளிப்புகளையும்  உதவிகளையும் வழங்கினார்.

திருவாட்டி உமா ராமகிருஷ்ணன் மற்றும் அவரின் மகனுடன் மார்சிங் மக்கள் செயல் கட்சிக் குழுவினர்.
திருவாட்டி உமா ராமகிருஷ்ணன் மற்றும் அவரின் மகனுடன் மார்சிங் மக்கள் செயல் கட்சிக் குழுவினர். - படம்: மார்சிலிங் மசெக கிளை

உடைந்த அலமாரியைச் சரிசெய்வது, வழுக்காத மிதியடியைப் போட்டு வீட்டின் கழிப்பறைப் பாதுகாப்பை மேம்படுத்தியது, அவரது வீட்டிற்கு வண்ணம் பூசி பொலிவூட்டியது எனத் திருவாட்டி உமாவிற்குப் பலவழிகளிலும் உதவி கிடைத்தது.

“எதுவும் எதிர்பாராமல், குடும்பத்தைப்போல இந்தக் குழு எங்களுக்கு உதவியது,” என்றார் திருவாட்டி உமா. 

உதவி கேட்கும்போதெல்லாம், முடியாது எனக் கூறாமல் தங்களால் முடிந்தவரை கைகொடுக்க குழுவினர் முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்காக அவரும் உயர் நைட்டெக் பயிலும் அவரின் மகன் 22 வயது கீர்த்திகன் சசிதரனும் குழுவினர்க்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.


திரு தென்னரசின் வீட்டில் மின்விசிறி பொருத்த உதவும் மார்சிலிங் மக்கள் செயல் கட்சிக் கிளையைச் சேர்ந்த இளையர்கள்.
திரு தென்னரசின் வீட்டில் மின்விசிறி பொருத்த உதவும் மார்சிலிங் மக்கள் செயல் கட்சிக் கிளையைச் சேர்ந்த இளையர்கள். - படம்: மார்சிலிங் மசெக கிளை

நாட்பட்ட நோய், பார்வை, செவிப்புலன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள திரு தென்னரசுக்கு ‘சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின்’மூலம் (EASE) உதவிகிட்ட அமைச்சர் ஸாக்கி முகம்மது தனிப்பட்ட வகையில் ஆதரவு வழங்கினார்.

இதன்மூலம், கைப்பிடிகள் மற்றும் முதியோருக்கான குளியல் வசதிகள் போன்ற முதியோருக்கான வீட்டு மேம்பாடுகளுக்கான மானியத்தை அவர் பெற முடிந்தது. அத்துடன், அவருக்கு ஒரு புதிய மின்விசிறியும் கிடைத்தது.

தம் தாயார் இருந்த காலத்திலிருந்தே இந்தக் குழு தமக்கு உதவி வருவதாகத் திரு தென்னரசு குறிப்பிட்டார்.

இரு குடும்பத்தினர்க்கும் தீபாவளிப் பலகாரங்கள், உடைகள், உணவுப்பொருள்களோடு ரொக்கமும் கிடைத்தது.

இவ்வாண்டு ஜனவரியில் தொண்டூழியத்தில் ஈடுபடத் தொடங்கிய வணிக மேம்பாட்டு நிர்வாகி குபேர குமாரன், 28, இது நீண்ட காலமாக இயங்கி வரும் ‘புரோஜெக்ட் ஹேப்பி’ முயற்சியின் ஒரு பகுதி என்று பகிர்ந்துகொண்டார்.

இந்த முயற்சியானது குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் மார்சிலிங்கின் சமூக உணர்வை வெளிப்படுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்