செம்ப்கார்ப் மரின் என்று முன்னர் அழைக்கப்பட்ட சீட்ரியம் நிறுவனத்துக்கு பிரேசில் ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து, அந்நிறுவனத்திடம் சிங்கப்பூர் அதிகாரிகள் கூட்டு விசாரணை மேற்கொள்கின்றனர்.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவும் இணைந்து நடத்தும் விசாரணையில், கூடுதல் தகவல்களை வழங்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக சீட்ரியம் தெரிவித்தது.
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையிடம் ஜூன் 15ஆம் தேதி நிறுவனம் அதைத் தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு அப்போதைய செம்ப்கார்ப் மரின் நிறுவனம் கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்து அது சீட்ரியம் எனப் பெயர் மாற்றம் கண்டது.
செம்ப்கார்ப் மரின் என்ற பெயரில் இயங்கியபோது அந்நிறுவனமோ அதன் அதிகாரிகளோ குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பங்குபத்திர, வருநிலை வர்த்தகச் சட்டம் 2001, ஊழல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடுமையான குற்றங்கள் சட்டம் 1992 ஆகியவற்றுடன் அச்சட்டங்களின் முந்தைய பதிவுகள் அனைத்தின்கீழும் அவை குற்றச்செயல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு விசாரணையில் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு தருவதாக சீட்ரியம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் அடையாளம் காணப்பட்டால் அதுகுறித்து உரிய வகையில் அறிவிப்புகளை வெளியிட அது உறுதியளித்தது.
இவ்வேளையில், பங்குதாரர்களும் முதலீட்டாளர்களும் சீட்ரியம் நிறுவனப் பங்குகளைக் கவனத்துடன் கையாளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 14ஆம் தேதி சீட்ரியம் நிறுவனப் பங்குகளின் விலை 1.77 விழுக்காடு குறைந்து 1.67 வெள்ளியாகப் பதிவானது.
சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், ‘டிபிஏ’ எனப்படும் நிபந்தனைகளின்கீழ் சட்ட நடவடிக்கையைச் சிறிது காலம் நிறுத்திவைப்பதற்கான ஒப்பந்தத்துக்கு இணங்கியுள்ளதாக மார்ச் மாதத்தில் சீட்ரியம் தெரிவித்தது.
15 ஆண்டுகளுக்குமுன் பிரேசிலில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் சம்பவங்களில் தொடர்பிருப்பதாக அந்நிறுவனத்திற்கு 110 மில்லியன் அமெரிக்க டாலர் (S$149 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் 53 மில்லியன் அமெரிக்க டாலரை பிரேசில் அதிகாரிகளிடம் திருப்பித்தருவதற்கு, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையின் கேள்விக்கு அளித்த பதிலில், இது தொடர்பான ஒப்பந்தம் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்று கூறியது.

