மத்திய கிழக்கு வட்டாரத்தில் மூண்ட போர் ஐந்தாவது வாரத்திற்குத் தொடரும் வேளையில் சிங்கப்பூரிலும் பிற நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகள் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளன.
எண்ணெய் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைச் சமாளிப்பதா, பொருளியல் மந்தநிலையைச் சமாளிப்பதா என்ற குழப்பத்தில் வங்கிகள் சிக்கியுள்ளன.
இரண்டு விதமான அச்சுறுத்தல்களையும் சிங்கப்பூர் எவ்வாறு கையாளும் என்பது ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் காலாண்டு கொள்கை முடிவுகளை அறிவிக்கும்போது தெரியவரும்.
ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது மட்டுமின்றி உரம், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து பெறப்படும் வேதிப்பொருள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள்களின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
மார்ச் 30ஆம் தேதி நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட $115.58 டாலராகப் பதிவானது.
அதே காலகட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிபொருள், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் இரட்டிப்பாகின.
எரிசக்தி விலைகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால் முக்கியப் பொருள்களுக்கும் சேவைகளுக்குமான தேவை கணிசமாகக் குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கு வட்டாரத்தின் எரிசக்தி, தொழிற்துறை உள்கட்டமைப்பு ஆகியவைமீது தாக்குதல் அதிகரித்தால் போர் முடிந்த பிறகும் அவற்றை மீண்டும் அமைக்க நீண்டகாலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
விலைகள் அனைத்தும் போருக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பும்முன், விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பவேண்டும்.
மார்ச் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட மாதாந்தரப் பணவீக்க அறிக்கையின்படி அதிகரிக்கும் அனைத்துலக எரிசக்தி விலைகளால் சிங்கப்பூரின் இறக்குமதி செலவினம் மீதுள்ள நெருக்கடி அதிகரிக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டது.
பணவீக்கத்தால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளால் ஏப்ரல் மாதத்துக்கான நிதிக் கொள்கையை ஆணையம் கட்டுப்படுத்தும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக பெரும்பாலான நிபுணர்கள் கூறினர்.

