தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரி உயர்வு தாக்கத்தைச் சமாளிக்க சிங்கப்பூர் நாணயக் கொள்கையில் மேலும் தளர்வு

2 mins read
c3c71389-7acf-4c54-b384-579a74ed4fe3
ஆணையத்தின் நடவடிக்கையை பொருளியல் பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்த்தனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர் மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையை மேலும் தளர்த்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு உலக வர்த்தகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சியில் சிக்கல் ஏற்படாதிருக்க அந்த ஏற்பாட்டை மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம் செய்துள்ளது.

மேலும், பணவீக்கம் தணிந்து வருவதற்கு ஏற்ப அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைந்து உள்ள நிலையில் தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்த அடிப்படை பணவீக்கம் குடும்பச் செலவுகளைச் சிறப்பான முறையில் கையாளும் வகையில், இவ்வாண்டு முழுவதும் சராசரியாக 0.5 விழுக்காட்டுக்கும் 1.5 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.

அந்த விகிதம் 1 விழுக்காட்டுக்கும் 2 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கக்கூடும் என்று கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மிதமாகவும் படிப்படியாக உயரும் வகையிலான நாணயக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க இருப்பதாக ஆணையம் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்தது.

அது தனது அறிக்கையில், “வர்த்தகத்தை சிங்கப்பூர் அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் உலக விநியோகத் தொடருடன் அது அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் நிலையிலும் உலக, வட்டார வர்த்தகம் மெதுவடைந்து வருகிறது.

“அதே நேரம் வரத்தகக் கொள்கையில் நிலவும் நிச்சயமற்ற போக்கு அதிகரிக்கிறது. இவை எல்லாம் வெளியுலகைச் சார்ந்திருக்கும் துறைகளைச் சோதிக்கக்கூடியவை. அதன் தாக்கம் உள்நாடு சார்ந்த துறைகளுக்கும் பரவும்,” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், “நிதிச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் சிங்கப்பூரின் பொருளியல் சரிவுக்கான அபாயத்தை உணர்த்துகின்றன. வெளிநாடுகளில் உள்ள தேவை எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மேலும் குறையும் நிலையும் உள்ளது,” என்றும் ஆணையம் விளக்கியுள்ளது.

சிங்கப்பூருக்கு திரு டிரம்ப் 10 விழுக்காடு வரி விதித்தாலும் ஏற்றுமதி சார்ந்த பொருளியலில், அந்த விழுக்காட்டையும் தாண்டி பாதிப்பு வரக்கூடும் என்றும் அதனால் சிங்கப்பூரின் ஏற்றுமதி செலவுமிகுந்ததாக மாறக்கூடும் என்றும் பகுப்பாய்வாளர்கள் கணிக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில், ஆணையம் தனது நாணயக் கொள்கையை மேலும் தளர்த்தக்கூடும் என்று பொருளியல் பகுப்பாய்வாளர்கள் முன்னரே எதிர்பார்த்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்